மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்ற, ‘தினமலர்’ நாளிதழின் கட்டுரையானது, பல தரப்பினரிடையேயும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாண்டிய நாடு படைப்புக் காலம் தொட்டே மேம்பட்டு வந்துள்ளது. ‘வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரித லின்று’ என்ற திருக்குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர், பழங்குடி என்பதற்கு, ‘பழங்குடி என்பது தொன்று தொட்டு வருகிற குடி. சேர, சோழ, பாண்டியர் என்றார் போல, படைப்புக் காலம் தொட்டு, மேம்பட்டு வருதல்…’ என்று உரை தருகிறார்.
எனவே, பாண்டிய நாடு படைப்புக் காலம் தொட்டே மேம்பட்டு வந்த நாடு என்பது, தெளிவாக தெரிகிறது. பாண்டியர்கள், மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். ஏற்கனவே மதுரையானது, பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் கீழ், பல பெருமைகளை பெற்று விளங்கிய தலைநகரமாகும். முத்தமிழ் மொழியை முறையாக வளர்த்த பெருமை, பாண்டிய நாட்டிற்கே உரியது. செந்தமிழ் மொழியின் பிறப்பிடமாகிய பொதிகை மலை, பாண்டிய நாட்டில் தான் அமைந்துள்ளது.சங்க காலத்திற்கு முன், பாண்டிய மன்னர்களின் ஆட்சி இருந்ததை அறிகிறோம்.
வடிவலம்ப நின்ற பாண்டியன், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி எனும் இருவரும், சங்க காலத்திற்கு முன் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களாக அறியப்படுகின்றனர். குடுமி என்பது இயற்பெயர்; பாண்டியர், பல வேள்விகளை செய்த காரணத்தால், ‘பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி’ எனும் சிறப்பை பெற்றான். இவ்வரசர், மதுரை காஞ்சியில் மாங்குடி மருதனாரால் பாராட்டப்பட்டுள்ளார்; பல செப்பேடுகளும், பல்யாகசாலை முதுகுடுமியின் பெருமைகளைப் பேசுகின்றன. மதுரை தலைநகர்கி.பி., 2ம் நுாற்றாண்டு வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களை, கடைச்சங்க பாண்டியர் என, குறிப்பிடுகின்றனர். சரித்திரப் பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள், கடைச்சங்கத்தை ஆட்சி புரிந்த, 49 பாண்டிய மன்னர்களில், 20 பாண்டிய மன்னர்களின் பெயரை அறிய முடிகிறது என்று, தன் ஆய்வில் தெரிவித்துள்ளார்.
மேலும், 49 பாண்டிய மன்னர்களும், 1,850 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர் என்றும் தெரிய வருகிறது. முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னனே, காலத்தால் முற்பட்டவன். மதுரையில் கடைச்சங்கத்தை நிறுவிய பாண்டியன், முடத்திருமாறன் என்பதும் குறிப்பிடத்தக்கது.பாண்டிய மன்னர்களுள் கடுங்கோன், மாறவர்மன் அரிகேசரி, கோச்சடையன் ரணவீரன், வரகுண பாண்டியன், முதலாம் சடையவர்மன், சுந்தர பாண்டியன் முதலாம் மாறவர்மன், குலசேகரன் போன்ற பாண்டிய மன்னர்கள், மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். ‘கூன் பாண்டியன் காலத்தில், மதுரை பல சிறப்புகளைப் பெற்றிருந்தது’ என, சீன நாட்டு யாத்தீரிகர் யுவான்சுவாங் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சங்க காலத்திலேயே, மதுரை கோவிலை மையமாக வைத்து, அழகான நகர நிர்மாணத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. மாடங்களும், கோட்டைகளும், மதில்களும், அகழிகளும் கொண்டதாகவும், மிகுந்த பாதுகாப்பு உடையதாகவும் அமைந்திருந்தது. பரிபாடலில், மதுரையின் நகர அமைப்பை, ஒரு தாமரைப் பூவோடு ஒப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.மதுரையான மதுராதமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது, ஒரு நகரத்தை எப்படி நிர்மாணம் செய்வது என்பதை அறிவதற்காக, மேலை நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள நகர அமைப்புக்களை அறிந்து கொள்ள, சில உயர் அதிகாரிகள் விரும்பினர்.இதையறிந்த காமராஜர், ‘மேலை நாடுகளுக்கு அரசு அதிகாரிகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, வீண் செலவை ஏற்படுத்த வேண்டாம்… மதுரைக்கு சென்று, அங்குள்ள நகர அமைப்பை பாருங்கள்; அதைவிட, சிறந்த நகர அமைப்பு எங்கும் இல்லை…’ என்றார்.நேருவும், மதுரையின் பெருமையை நன்கு அறிந்திருந்தார்.
மதுரை என்பது, ஆங்கிலத்தில் ஒரு காலத்தில், ‘மெஜுரா’ என்று எழுதப்பட்டிருந்தது. இதனால், பல சிக்கல்கள் தபால் துறைக்கு எழுந்தது. மதுரா என்ற பெயரில், வட மாநிலத்திலும் ஒரு நகரம் உள்ளது. எனவே, அப்போதே மதுரா என்கிற ஆங்கிலப் பெயரை, மதுரை என்று ஆங்கிலத்தில் எழுதி, மாற்றம் செய்தார் நேரு. இதை அன்றைய தமிழக அரசும், மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது.
இலக்கியங்கள் போற்றுது
மதுரைக்கு பல பெயர்கள் உண்டு. ஆலவாய் என்பது ஒரு பெயர். மதுரை நகரின் எல்லையை உணர்த்த சிவபெருமான், தான் அணிந்திருந்த பாம்பை, நகரத்திற்குள்ளே தவழ விட, அது வட்ட வடிவ மாக ஊர்ந்து சென்று, தன் வாயால் ஒரு நிலப்பரப்பை கவ்வி எல்லையைக் காட்டியதால், இத்தலம் ஆலவாய் என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமான் சடைமுடியில் இருந்து, அமிர்தமாகிய மதுவைத் தெளித்து, நகரை புனிதமாக்கியதால், மதுரை என, இந்நகரம் அழைக்கப்பட்டதாக புராணங்கள் வாயிலாக தெரிய வருகிறது. மதுரை என்ற சொல்லுக்கு, அமிர்தத்தை விட இனிமை பெற்றது என்றும் பொருள் கொள்ளலாம். பேச்சு வழக்கில், மருதை என்றும் சிலர் அழைப்பர். இது கொச்சை மொழி அன்று; இந்நகரத்தில், மருத மரங்கள் செழித்து வளர்ந்ததால், இந்நகரை மருதை என்று முதலில் அழைத்து, பின், அப்பெயர் மருகி, மதுரை என்று ஆகியிருக்கலாம் என்று, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
‘வையை என்னும் பொய்யாப் குலக்குடி…’ என்று சிலப்பதிகாரம் வைகை நதியைப் பாடுகிறது. தனக்கென சங்கத் தமிழ் பாடல்களைப் பெற்றிருப்பதுடன், தமிழின் பெருமையை உலகிற்கு விளக்கிய சிறப்பைக் கொண்டது, வைகை ஆறு. வைகை ஆறு பாயும் நகரம் மதுரை. சங்கத் தமிழ் நுால்களில் ஒன்றான பத்துப்பாட்டில் திருமால், முருகன் ஆகியோரை புகழ்ந்து நெடும் பாடல்களைப் பாடி, வைகை ஆற்றையும் புகழ்ந்து பாடியிருப்பதை அறிய முடிகிறது. கங்கை, காவிரி போன்ற நதிகளை, அன்னை வடிவில் போற்றியதைப் போலவே, வைகை நதியையும், அழகிய நதிப் பெண்ணாகப் போற்றி, சங்க இலக்கியங்கள் மகிழ்கின்றன.திருவிளையாடல் புராணத்தில், மாணிக்கவாசகரின் பெருமையை வெளிப்படுத்த, சிவபெருமான் எழுப்பிய பல திருவிளையாடல்கள் கூறப்பட்டுள்ளன.
அவற்றில், வைகையில் வெள்ளம் பெருகச் செய்து தானே, வெள்ளத்தின் கரை அடைக்க, மண் சுமந்து, பாண்டியனிடம் பிரம்படி பெற்றது போன்ற பல கதைகள் உள்ளன.இதில், சிவபெருமான், வைகை ஆற்றின் மண்ணை, கூடையில் அள்ளி சுமந்தது பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதைக் குறிக்கும் விழா, மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.சிவன் சுமந்த மணலைக் கொண்ட வைகை ஆற்றுக்கு, மேலும் சிறப்பு, அது தமிழைச் சுமந்ததால் வந்ததாகும். தாய் மடியில், சேய் போல் வைகை ஆற்றின் தண்ணீரில், தமிழ் அன்னை தவழ்கிறாள். எனவே, வைகை ஆறும் பாயும் மதுரையை, தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக ஆக்கினால், அது பெருமைப்படக் கூடிய விஷயம்.- தலைநகர் மதுரை,
dinamalar