மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

மராட்டியத்தில் அடுக்குமாடி கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை, மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் ‘தாரிக் கார்டன்’ என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. 40 வீடுகளை கொண்ட இந்த கட்டிடத்தில் சுமார் 200 பேர் வரை வசித்து வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இடிபாடுகளுக்குள் உயிரோடு புதைந்தவர்கள் எண்ணிக்கையில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகின.

இந்தசூழலில் கட்டிட இடிபாடுகளில் 59 பேர் சிக்கியதாக நேற்று முன்தினம் நள்ளிரவில் மாநில அரசின் தலைமை செயலக கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கூறியிருந்தனர். பின்னர் நடந்த விசாரணையில் சுமார் 30 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் மும்பை, புனேயில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட தொடங்கினர்.

2-வது நாளாக நேற்றும் மீட்பு பணி தொடர்ந்தது. நேற்று வரை இடிபாடுகளில் இருந்து 13 பேர் பிணமாக மீட்கப்பட்டதாக பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர். மேலும் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில் கட்டிட விபத்தில் சிக்கிய மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

dailythanthi