ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

சென்னை, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது.

இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பல மாதங்களாக இந்த வழக்குகள் விசாரிக்கப்பட் டநிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

dailythanthi