இந்தியாவில் ஒரே நாளில் 76,472 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த பாதிப்பு 34 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் ஒரே நாளில் 76,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்தை கடந்து விட்டது.

புதுடெல்லி, இந்த நூற்றாண்டில் மனித குலத்தின் மிகப்பெரும் எதிரியாக உருவெடுத்து இருக்கும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறது. கண்ணுக்கு தெரியா அந்த எதிரியின் கோரப்பார்வையில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. இங்கும் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் பரவி மக்களை பீதிக்கு உள்ளாக்கி வருகிறது.

அந்தவகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மேலும் 76,472 பேர் கொரோனாவிடம் சிக்கியுள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்தை கடந்து விட்டது. மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 63 ஆயிரத்து 972 என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இதைப்போல அந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,021 பேர் தங்கள் இன்னுயிரை கொரோனாவிடம் இழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 331 பேர், கர்நாடகத்தில் 136, தமிழகத்தில் 102, ஆந்திராவில் 81, உத்தரபிரதேசத்தில் 77, மேற்கு வங்காளத்தில் 56, பஞ்சாப்பில் 51, பீகார் மற்றும் டெல்லியில் தலா 20 பேர் என இறப்பு நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம் கொடிய கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கையும் 62 ஆயிரத்து 550 ஆக உயர்ந்து பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்த எண்ணிக்கையிலும் மராட்டியமே முதலிடத்தில் உள்ளது. அங்கு அதிகபட்சமாக 23,775 பேரும், அடுத்ததாக தமிழகத்தில் 7,050 பேரும் மரணித்து உள்ளனர். அடுத்தடுத்த இடங்களை கர்நாடகா (5,368), டெல்லி (4,389, ஆந்திரா (3,714) ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.

இது ஒருபுறம் இருக்க கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பது சற்று ஆறுதலை தருகிறது. அந்தவகையில் 26 லட்சத்து 48 ஆயிரத்து 998 பேர் இதுவரை கொரோனாவை வென்றுள்ளனர். இது 76.47 சதவீதம் ஆகும். இந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில் 7 லட்சத்து 52 ஆயிரத்து 424 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இது 21.72 சதவீதம் ஆகும். இந்த சதவீதம் குறைந்து வருவதைப்போல இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.81 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியை கடந்து விட்டது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட 9,28,761 பரிசோதனைகளுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 4 கோடியே 4 லட்சத்து 6 ஆயிரத்து 609 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதும் முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், இந்த 4 கோடி அளவு என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 3 கோடி பரிசோதனை என்ற நிலையை கடந்த 17-ந் தேதிதான் இந்திய எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 3-வது நாளாக நேற்று முன்தினமும் 9 லட்சத்துக்கு மேற்பட்ட பரிசோதனைகள் நடதப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, நாளொன்றுக்கு 10 லட்சம் பரிசோதனை என்ற அளவை இந்தியா ஏற்கனவே எட்டியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

புனேயில் உள்ள ஒரேயொரு பரிசோதனைக்கூடத்துடன் தொடங்கிய இந்தியாவின் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று 1,576 ஆய்வுக்கூடங்கள் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இதில் 574 ஆய்வகங்கள் தனியாருக்கு சொந்தமானவை. ‘பரிசோதி, கண்டறி, சிகிச்சை செய்’ என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வேகமெடுத்து வருகின்றன.

இவ்வாறு பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளதால் கொரோனா தொற்று எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. குறிப்பாக 10 லட்சம் பரிசோதனைக்கு 29,280 தொற்று என்ற அளவில் உயர்ந்து இருக்கிறது. அதேநேரம் தேசிய அளவில் பாதிப்பு விகிதம் 8.57 ஆக குறைந்திருக்கிறது. இது தொடர்ந்து குறைந்து வருவதாகவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

dailythanthi