அமெரிக்கா, பிரேசிலை முந்தியது இந்தியா; 83 ஆயிரத்தைக் கடந்தது ஒரு நாள் பாதிப்பு

புதுடில்லி: உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 1.71 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்; இதுவரை 8.66 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

உலகிலேயே கொரோனாவால் மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 62.90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 1.89 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,021 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு பிரேசிலில் உள்ளது. அங்கு இதுவரை 40 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 லட்சம் பேரில் இதுவரை 1.24 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1,245 பேர் பலியாகினர்.

அதிக கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 38.48 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 29.67 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,045 பேர் பலியாகி உள்ளனர். தொற்று பரவத் துவங்கியதில் இருந்து, இந்தியா மிக அதிகபட்ச கொரோனா பாதிப்பை நேற்று பதிவு செய்துள்ளது. இந்தியா 80 ஆயிரம் பாதிப்புகளைத் தாண்டியது இது மூன்றாவது முறையாகும். மேலும் கவலைக்குரிய வகையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் மூன்று நாட்கள் ஒரு நாள் பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியா கொரோனா ஒரு நாள் பாதிப்பில் சமீப நாட்களாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உயிரிழப்பு மற்றும் மொத்த பாதிப்பில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

dinamalar