“அமைதி நிலவ வேண்டுமானால் ஆக்கிரமிப்பு இருக்கக்கூடாது” – சீன ராணுவ மந்திரி முன்னிலையில் ராஜ்நாத்சிங் பரபரப்பு பேச்சு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிராந்தியத்தில் அமைதி நிலவ ஆக்கிரமிப்பு இல்லாமை அவசியம் என்று சீன ராணுவ மந்திரி முன்னிலையில் ராஜ்நாத்சிங் பேசினார்.

மாஸ்கோ, கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இந்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றுள்ள ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நேற்று அங்கு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த அமைப்பில், இந்தியா, சீனா உள்பட 8 நாடுகள் இடம்பெற்றுள்ளன. கூட்டத்தில், சீன ராணுவ மந்திரி வெய் பெங்கே கலந்து கொண்டார்.

அவர் முன்னிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள 8 நாடுகளில் உலக மொத்த மக்கள்தொகையில் 40 சதவீதம்பேர் வசிக்கிறார்கள். இத்தகைய பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பும் நிலவ வேண்டுமானால், நம்பிக்கை, ஒத்துழைப்பு, ஆக்கிரமிப்பு இல்லாமை, சர்வதேச விதிமுறைகளை மதித்தல், கருத்து வேறுபாடுகளுக்கு அமைதி தீர்வு காணுதல், மற்றவர்களின் நலன்களை மதித்தல் ஆகியவை அவசியம்.

அனைத்துவகையான பயங்கரவாதத்தையும், அதை தூண்டி விடுபவர்களையும் சந்தேகத்துக்கு இடமின்றி இந்தியா கண்டிக்கிறது. இந்த ஆண்டு, இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்ததன் 75-வது ஆண்டாகும். ஒரு நாடு, இன்னொரு நாட்டை ஆக்கிரமித்தால், எல்லோருக்குமே அழிவு ஏற்படும் என்பதுதான் இரண்டாம் உலகப்போரின் நினைவுகள் நமக்கு பாடம் கற்பிக்கின்றன.

பாரசீக வளைகுடா நாடுகளில் நிலவும் சூழ்நிலை இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. அந்த நாடுகள், பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலவரமும் கவலை அளிக்கிறது.

கொரோனா நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால், இயற்கையின் சக்தியை தடுக்க மனித இனம் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளை மறக்க வேண்டும் என்பதுதான். கொரோனாவுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி கண்டறிந்த ரஷிய விஞ்ஞானிகளையும், சுகாதார பணியாளர்களையும் பாராட்டுகிறோம்.

இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்துக்குப்பின் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் சீன ராணுவ மந்திரி வெய் பெங்கை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் ராணுவ செயலாளர் அஜய் குமார், ரஷியாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

சீன ராணுவ மந்திரியின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாட்டு ராணுவ மந்திரிகளின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனினும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

malaimalar