ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவர் மருந்து வழங்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு, கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும் வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. தினசரி 100-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்து வருகின்றனர். இதனால் கொரோனாவுக்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்பு 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதுபோல் பாதிப்பும் 3½ லட்சத்தை கடந்து விட்டது. கர்நாடகத்தில் அதிகளவில் இறப்பு நிகழ்வதாக மத்திய அரசும் கவலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உயிரிழப்பை குறைக்கும் நோக்கத்தில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு விலை உயர்ந்த ரெம்டிசிவர் மருந்தை பயன்படுத்த கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனாவால் நிகழும் மரணங்களை தடுக்கும் நோக்கத்தில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரெம்டிசிவர் மருந்தை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது விலை உயர்ந்த மருந்து ஆகும். ஒரு நோயாளிகளுக்கு 6 ரெம்டிசிவர் ஊசி போடப்பட வேண்டும். இதுகுறித்து முழு விவரங்களை நோயாளியின் குறிப்பேட்டில் டாக்டர்கள் எழுத வேண்டும். இந்த மருந்து பயன்படுத்துவதை கண்காணிக்க மண்டல அளவில் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.
ஆபத்தான நிலையில் உள்ள அவசரமாக தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்தை பயன்படுத்த வேண்டும். உள்நோயாளிகள் அனைவருக்கும் பயன்படுத்த கூடாது. இந்த மருந்துக்கு ஆகும் செலவை அந்த குழு கண்காணிக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த மருந்து கிடைக்கிறதா? என்பதை குழு ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
dailythanthi