செப்.,13ல் நீட் தேர்வு உறுதி: மாணவர்களின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி: நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், வரும் 13ம் தேதி தேர்வு நடப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஜேஇஇ தேர்வு செப்.,1 முதல் 6ம் தேதி வரை நடந்தது. நீட் தேர்வு வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், கொரோனா பரவல் குறையாத காரணத்தினால், நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி 20 மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், மனுக்களை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும். ஏற்கனவே மாணவர்கள் தரப்பில் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்திருக்கிறோம். தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரிய மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளோம். இப்போது எல்லாம் முடிந்துவிட்டது . இனி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். இந்த புதிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்தனர். இதனால், திட்டமிட்டபடி வரும் 13ம் தேதி நீட் தேர்வு நடப்பது உறுதியாகியுள்ளது.

dinamalar