இந்தியாவில் பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை கடந்தது: மேலும் 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை கடந்து விட்டது. நாடு முழுவதும் மேலும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி, கொரோனா எனும் கொடிய அரக்கனிடம் இருந்து மீள முடியாமல் உலகம் முழுவதும் திணறிக்கொண்டிருக்க, அந்த பெருந்தொற்றின் கொடூர கரங்களோ எல்லைகளை கடந்து விரிகிறது. தொற்றுக்கு ஆளானவர்களால் மருத்துவமனைகளின் வார்டுகள் நிரம்பி வழிகின்றன. உலகம் அனைத்திலும் பெருநகரம் முதல் குக்கிராமம் வரை இதுதான் தொடர்கதையாகி வருகிறது.

இந்த வைரசுக்கு எதிரான மருந்துகள் இதுவரை இல்லாததால், பரிசோதனைகளை அதிகரித்து தொற்றுக்கு உள்ளானவர்களை விரைவில் கண்டறிந்து, தனிமைப்படுத்தி தகுந்த சிகிச்சை அளிப்பதே கொரோனாவில் இருந்து மீளும் ஒரே வழியாக இருக்கிறது. எனவே உலக நாடுகள் அனைத்தும் தொடர்ந்து பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதில் குறியாக இருக்கின்றன.

இந்தியாவும் நாளுக்கு நாள் தனது பரிசோதனை வசதியை அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்றுக்கு ஆளானவர்களை விரைவில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதிக்கும் திறனை இந்தியா பெற்றிருக்கிறது.

அதன்படி நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரத்து 921 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாட்டில் நடத்தப்பட்டுள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்து விட்டது. குறிப்பாக 5 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரத்து 128 பரிசோதனைகள் நடந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

வாராந்திர சராசரி அடிப்படையில் ஜூலை மாதத்தில் 3.26 லட்சமாக இருந்த தினசரி பரிசோதனை எண்ணிக்கை இன்று 3 மடங்கு அதிகரித்து 10.46 லட்சமாக உள்ளது. ஜூலை 1-ந்தேதி நிலவரப்படி 10 லட்சம் பேருக்கு 6,396 பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 36 ஆயிரத்து 703 பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் 10 லட்சம் மக்களுக்கு 237 (ஜூலை 2-வது வாரம்) ஆக இருந்த தினசரி பரிசோதனை எண்ணிக்கை, தற்போது 758 ஆக அதிகரித்து இருக்கிறது. உலக நாடுகள் நாளொன்றுக்கு 140 (10 லட்சம் பேரில்) பரிசோதனையாவது மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியிருந்த நிலையில், இந்தியா அந்த எண்ணிக்கையை ஏற்கனவே கடந்து விட்டது.

கொரோனாவுக்கு எதிரான பரிசோதனைக்காக இன்று நாடு முழுவதும் 1,668 பரிசோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் 1,035 ஆய்வகங்கள் அரசுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 75 ஆயிரத்து 809 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்து 80 ஆயிரத்து 422 ஆக அதிகரித்து விட்டது.

கடந்த 2 நாட்களாக 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட தினசரி தொற்று எண்ணிக்கையை இந்தியா பெற்றிருந்த நிலையில், நேற்று இது 75 ஆயிரமாக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையும் 1,133 ஆக உயர்ந்திருக்கிறது. இது மொத்த சாவு எண்ணிக்கையை 72 ஆயிரத்து 775 ஆக அதிகரித்து உள்ளது. எனினும் நாட்டின் கொரோனா பலி விகிதம் 1.70 ஆகவே இருப்பது கவனிக்கத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ள பலி எண்ணிக்கையில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 423 பேர் இறந்துள்ளனர். அடுத்ததாக கர்நாடகாவில் 141, தமிழகத்தில் 89, ஆந்திராவில் 70, பஞ்சாபில் 61, மேற்கு வங்காளத்தில் 58, உத்தரபிரதேசத்தில் 56, டெல்லியில் 32, அரியானாவில் 23, மத்திய பிரதேசம், காஷ்மீரில் தலா 17, சத்தீஷ்கார், குஜராத்தில் தலா 15, ராஜஸ்தானில் 14, ஜார்கண்டில் 13 பேர் பலியாகி உள்ளனர்.

இதைப்போல மொத்த சாவு எண்ணிக்கையிலும் மராட்டியம் (27,027), தமிழ்நாடு (7,925), கர்நாடகா (6,534), டெல்லி (4,599), ஆந்திரா (4,487), உத்தரபிரதேசம் (3,976), மேற்கு வங்காளம் (3,620), குஜராத் (3,120), பஞ்சாப் (1,923) ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கையும் 33 லட்சத்து 23 ஆயிரத்து 950 ஆக அதிகரித்து உள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 77.65 சதவீதமாகும். தற்போதைய நிலையில் 8.83 லட்சம் பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் அல்லது வீட்டு சிகிச்சையில் உள்ளனர்.

dailythanthi