ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும்: பாக்.,கிற்கு இந்தியா பதிலடி

ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் காஷ்மீர் குறித்த விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து அந்நாடு வெளியேற வேண்டும் எனக்கூறியுள்ளது.

இந்திய தூதர் வெளிநடப்பு

ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெய்நிகர் முறையில் தலைவர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில், நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சு ஒலிபரப்பு செய்யப்பட்டது.

அதில், இம்ரான்கான் கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தில் அமைதியான தீர்வு ஏற்படவே பாகிஸ்தான் விரும்புகிறது. இதற்காக, காஷ்மீரில் 2019 ஆக.,5க்கு முந்தைய நிலையை இந்தியா கொண்டு வருவதுடன், அங்கு மனித உரிமை மீறல், ராணுவ குவிப்பை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இம்ரானின் பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவையில் இருந்த இந்திய தூதர் மிஜிதோ வினிடோ வெளிநடப்பு செய்தார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேச்சு

இம்ரான் பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்தி, இந்தியாவின் நிலையை விளக்கி மினிதோ வினிடோ அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதனை பிரிக்க முடியாது. காஷ்மீரில், கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் மற்றும் விதிகள் அனைத்தும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். காஷ்மீர் குறித்து பேச வேண்டுமென்றால், அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறிதது மட்டும் தான். அதனை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து, அந்நாடு வெளியேற வேண்டும்.

இழிவுபடுத்திய வார்த்தைகள்

இந்த அவையில் சொல்வதற்கு ஒன்றுமில்லாத, தனது சாதனைகளை பற்றி பேச ஏதுமில்லாத, உலகத்திற்கு நல்ல கருத்துகளை சொல்லவும் முடியாத நபரின் சத்தத்தை, இந்த அவை கேட்டது. பொய், தவறான தகவல், போர்க்குணம் மற்றும் தீமை பரப்புவதை மட்டுமே இந்த அவையில் கண்டோம். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பயன்படுத்திய வார்த்தைகள் இந்த அவையை இழிவுபடுத்தியுள்ளன. அதேநபர் தான், பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை, தனது பார்லிமென்டில் தியாகி என புகழாரம் சூட்டினார்.பழமைவாதத்தில் புதைந்துள்ள ஒரு நாட்டிற்கு, நவீன நாகரீக சமுதாயத்தின் அமைதி, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவு போன்ற கோட்பாடுகள் வெகு தொலைவில் உள்ளன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இம்ரான் ஒப்புதல்

அந்த நாடானது(பாகிஸ்தான்), 39 ஆண்டுகளுக்கு முன், தெற்கு ஆசியாவில் இன படுகொலையை கொண்டு வந்து சொந்த மக்களை கொன்று குவித்தது. பயங்கரவாதிகளுக்கு, அரசின் பணத்தில் இருந்து பென்சன் வழங்குகிறது. ஐக்கிய நாடுகள் சபை தயாரித்த பயங்கரவாதிகள் பட்டியலில் பெரும்பாலானோர், அந்த நாட்டில் தான் உள்ளனர். இந்த அவையில் விஷத்தை கக்கியதலைவர் தான், கடந்த 2019ல் அமெரிக்காவில், தனது நாட்டில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் உள்ளனர் என்பதையும், அவர்களுக்கு பயிற்சி அளித்து ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீருக்கு அனுப்பி வைத்ததையும் வெளிப்படையாக ஒப்பு கொண்டார்.

அச்சுறுத்தல்

இந்த நாட்டில் தான் மத துவேஷ சட்டம் மூலம் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டவர்களை அழித்தது. வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தது. தனது நாட்டு மக்களையே, வேறுபகுதியை சேர்பந்தவர்கள், வேறு பிரிவை சேர்ந்தவர்கள் எனக்கூறியும், அண்டை நாட்டு மக்களை பயங்கரவாதிகள் மூலம் கொன்று குவித்தது. பயங்கரவாத அமைப்புகளுக்கு அரசியல் ரீதியாகவும், நிதியுதவியும் அளித்து உதவி வரும் பாகிஸ்தானின் செயல்கள் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இது குறித்து முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபை விவாதிக்க வேண்டும்.

பாகிஸ்தானின் சாதனைகள்

இந்த நாட்டின் முக்கிய சாதனையாக உலக நாடுகளுக்கு கூற வேண்டுமென்றால், 70 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது, இனப்படுகொலை, அடிப்படைவாதம் மற்றும் சட்டவிரோத அணுவர்த்தகம் ஆகியவை மட்டுமே. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்துவதும், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்துவதிலும், ஐ.நா., சபையை தனது சுயநலனுக்காக பொய் தகவல்களை பரப்புவதை நிறுத்தினால் மட்டுமே, பாகிஸ்தான், மற்ற உலக நாடுகளை போல் வழக்கமான நாடாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

மூன்றாவது முறை

இம்ரான் கானின் பேச்சிற்கு, பதிலளிக்கும் உள்ள உரிமையை இந்தியா பயன்படுத்தியது இது மூன்றாவது முறையாகும். கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் கூட்டத்தில், காஷ்மீர் குறித்த பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு, இந்த உரிமையை இரண்டு முறைய பயன்படுத்தி இந்தியா பதிலடி கொடுத்துள்ளது

dinamalar