மாவீரன் பகத் சிங் பிறந்தநாள்- பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா மரியாதை

மாவீரன் பகத் சிங்

மாவீரன் பகத் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி, அவரை நினைவுகூர்ந்தனர்.

புதுடெல்லி: இந்திய விடுதலை போராட்ட மாவீரன் பகத் சிங்கின், 113வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அழியாப் புகழ்பெற்ற தியாகி பகத்சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், அவரது துணிச்சல் மற்றும் வீரம் ஆகியவை நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பகத் சிங்கின் வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். அவரை துணிச்சல் மற்றும் தைரியத்தின் சின்னம் என்றும் அழைத்தார்.

உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஷாஹீது பகத் சிங் எப்போதுமே இந்தியர்களுக்கு உத்வேகம் அளிப்பவராகவே இருப்பார். தனது புரட்சிகர சிந்தனைகள் மற்றும் தியாகத்தின் மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய பாதையை உருவாக்கிய பகத் சிங்கிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எப்போதும் நமக்கு உத்வேகம் அளிப்பவராகவே இருப்பார்’ என கூறி உள்ளார்.

பகத் சிங் தேசத்தின் ஹீரோ என்றும், அழியாப்புகழ் பெற்ற தியாகி என்றும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.

புரட்சிகர சுதந்திர போராட்ட வீரரான பகத் சிங், பஞ்சாபில் உள்ள பைசலாபாத் மாவட்டம் (தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம்) பங்கா என்னும் கிராமத்தில் 1907ம் ஆண்டு இதே நாளில் (செப்.28) பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். சோசலிச புரட்சியாளராக ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார்.

பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு சம உரிமை பெறுவதற்காக உண்ணாவிரதம் இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.

முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாக இருந்த காவல் அதிகாரியைச் சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக, பகத் சிங் 24வது வயதில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.

malaimalar