டில்லி காற்று மாசுபாட்டிற்கு தீர்வு: இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடிப்பு

புதுடில்லி: டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் முக்கிய பிரச்னையாக உள்ள காற்று மாசுாபாட்டிற்கான தீர்வினை, இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய கழிவுகளை தீமூட்டி எரிப்பதால் வரும் புகை தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த விவசாய கழிவுகளில் இருந்து வெளிப்படும் புகையால் டில்லியில் காற்று மாசின் அளவு அபாயக் கட்டத்தை தாண்டி மக்களின் ஆரோக்கியம் பாதிப்பு அடைகிறது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் தீர்வு ஒன்றினை கண்டுபிடித்துள்ளது. டில்லி அருகே, பூசாவில் உள்ள இந்த நிறுவனம் எட்டு நுண்ணுயிரிகள் கலந்த டிகம்போஸர் கேப்சூல்களை தயாரித்துள்ளது. ஒரு கேப்சூலின் விலை ரூ 5/-

ஒரு ஹெக்டேர் அல்லது 2.5 ஏக்கர் தோட்டத்தில் உள்ள பழைய பயிர்களின் கழிவுகளை இந்த கேப்சூல்களைக் கொண்டு எளிதாக மக்கிப்போக செய்து விடலாம் என்று கூறப்படுகிறது. 4 கேப்சூல்களை 25 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் தோட்டத்தில் உள்ள பழைய பயிர்கள் மக்கிப் போகி விடும். இதனால் விவசாய கழிவுகளை எரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதே நேரம் நிலமும் செழிப்பாக மாறும். 2.5 ஏக்கர் நிலத்தில் உள்ள கழிவுகளை மக்கச் செய்வதற்கு ரூ 20 மட்டுமே செலவாகும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

இது குறித்து இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் அசோக் குமார் சிங் கூறியதாவது, ‛ நாங்கள் 5 வருடங்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த கேப்சூல்களை உருவாக்கி உள்ளோம். இதை விவசாயிகள் பயன்படுத்துவதால் கழிவுகளை எளிதாகவும் செலவில்லாமலும் கையாள முடிவதுடன் நிலமும் வளம் அடைகிறது. முக்கியமாக காற்று மாசு அடைவது தடுக்கப்படுகிறது. இது டில்லி மற்றும் அண்டை மாநிலங்களின் காற்று மாசு பிரச்னைக்கு தீர்வாக அமையும்’ இவ்வாறு அவர் கூறினார்

dinamalar