பள்ளிக்கல்வித்துறை
சுய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு அனுப்பிவைக்கிறோம் என்று மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று பள்ளிக்கு வரவேண்டும் என கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
சென்னை: கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகள் திறப்பு எப்போது இருக்கும்? என்று பலரும் பேசி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் ஒரு அரசாணையை திடீரென்று வெளியிட்டார். அதில், ‘அக்டோபர் 1-ந் தேதி முதல் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வர அனுமதி’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் குறித்தும், பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு விவரங்கள் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தன. அதன்படி, சுழற்சி முறையில் 50 சதவீத மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரலாம் என்றும், அதேபோல் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பணிக்கு வரலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு விருப்பத்தின் பேரில் வர அனுமதி என்று அரசு தெரிவித்தது போல, மாணவர்களை சுயவிருப்பத்தின் பேரில் தான் அனுப்பிவைக்கிறோம் என்று பெற்றோரும் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. இதற்கென்று பிரத்யேகமாக தலைமை ஆசிரியருக்கு தெரிவிப்பது போன்ற ஒரு கடிதத்தையும் உருவாக்கியுள்ளது. அதில், ‘1.10.2020 முதல் பாடங்கள் தொடர்பான ஆலோசனைகளை பெற அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எனது சுயவிருப்பத்தின் பேரில் பள்ளிக்கு அனுப்பி வைக்க முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாசகத்துக்கு கீழ் பெற்றோர் தங்களுடைய கையொப்பத்தை இடவேண்டும். மேலும் வீட்டு முகவரி, செல்போன் எண், வாட்ஸ்-அப் எண் ஆகியவற்றையும் அதில் தெரிவிக்க வேண்டும்.
இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, ‘இதுபற்றி இன்னும் பள்ளிகளுக்கு எந்த ஒரு தெளிவான அறிவிப்பும் வந்து சேரவில்லை. அப்படி வரும்போது அதனை பின்பற்றி பள்ளிகளில் மாணவர்களை அனுமதிப்போம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவித்து தான் வருகின்றனர். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலையே இன்னும் சில மாணவர்கள் வாங்க வரவில்லை’ என்றார். கல்வித்துறை இதுபற்றிய தெளிவான அறிவிப்பை ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தெரிவிக்கும் பட்சத்தில் தான் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வருவார்கள் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது
malaimalar