வேளாண் மசோதாக்களை எதிர்ப்பதா? விவசாயிகளை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வேளாண் மசோதாக்களை எதிர்ப்பதன் மூலம் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி, உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதியை சுத்தப்படுத்தும் ‘நமாமி கங்கை’ திட்டத்தின் கீழ் 6 பெரிய திட்டங்களை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து பேசினார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மறைமுகமாக காங்கிரசை அவர் கடுமையாக விமர்சித்தார்.

மோடி பேசுகையில் கூறியதாவது:-

கடந்த பல ஆண்டுகளாக கங்கை நதியை சுத்தப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அதில் பொதுமக்கள் பங்களிப்பு இல்லாததாலும், தொலைநோக்கு பார்வை இல்லாததாலும் அவை தோல்வியில் முடிந்தன.

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரம் தொடர்பான சீர்திருத்த மசோதாக்கள் சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. இந்த சீர்திருத்தங்கள் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்களை பலப்படுத்தும்.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே மத்திய அரசு வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் மூலம், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்கலாம். அதற்கான சுதந்திரத்தை இந்த சட்டங்கள் அவர்களுக்கு வழங்குகின்றன.

விவசாயிகளுக்கு உரிமை வழங்கும் போது சிலர் அதை எதிர்க்கின்றனர். விவசாயிகளுக்கு சுதந்திரம் வழங்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை திறந்த சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இடைத்தரகர்கள் லாபம் பெறுவதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். விவசாயிகள் வணங்கும் டிராக்டர் போன்ற வேளாண் சாதனங்களை தீவைத்து எரிப்பதன் மூலம் அவர்களை அவமதிக்கிறார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று சொன்னார்கள். ஆனால் செயல்படுத்தவில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி பாரதீய ஜனதா அரசுதான் அதை செயல்படுத்தி இருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை விஷயத்தில் எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்று விவசாயிகளுக்கு நான் உறுதி அளிக்கிறேன்.

வேளாண் சட்டங்களை தங்கள் சொந்த ஆதாயத்துக்காகவே எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. 4 தலைமுறைகளாக ஆண்டவர்கள் இப்போது மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். எதிர்க்கட்சி என்பதால் எதிர்க்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே எதிர்க்கிறார்கள்.

விவசாயிகள், இளைஞர்கள், ராணுவத்தினர் நலனில் இவர்களுக்கு அக்கறை கிடையாது. ராணுவத்தில் ‘ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை கொண்டு வந்த போதும் இவர்கள் எதிர்த்தார்கள். நவீன போர் விமானங்கள் வேண்டும் என்று விமானப்படை கேட்ட போது இவர்கள் அதை பொருட்படுத்தவே இல்லை. பாரதீய ஜனதா அரசு பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்ததும் பிரச்சினையை ஆரம்பித்துவிட்டார்கள். ரபேல் போர் விமானங்களை வாங்கி விமானப்படையை பலப்படுத்துவதை அவர்கள் எதிர்க்கிறார்கள்.

இந்தியாவின் முயற்சியால் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையும் எதிர்க்கிறார்கள். பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்த போது அதையும் எதிர்த்தார்கள். சரக்கு மற்றும் சேவை வரியையும் எதிர்த்தார்கள்.

இப்படி நாட்டு மக்களின் நன்மைக்காக அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினாலும், அதை எதிர்ப்பதை இவர்கள் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள்.  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

dailythanthi