மும்பை, புனேயில் கனமழை நீடிப்பு- கொங்கன் பிராந்தியத்திற்கு இன்று ரெட் அலர்ட்

பாரமதியில் வெள்ளம் சூழ்ந்திருந்த காட்சி

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வருவதால் கொங்கன் பிராந்தியத்தில் இன்று அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மும்பை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வட கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. உள் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு நோக்கி நகர்ந்து மிககுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதால் மகாராஷ்டிராவிலும் தொடர்ந்து கனமழை பெய்கிறது.

மும்பை, புனேயில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இன்று காலை தெற்கு மத்திய மகாராஷ்டிரா பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டிருந்தது. இதன் நகர்வு காரணமாக கொங்கன், கோவா மற்றும் கடலோர கர்நாடகா, மத்திய மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் ஆகிய பகுதிகளில் இன்று கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மேலும் நகர்ந்து அரபிக் கடலில் சேரும்போது தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. அதன்பின்னர் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மகாராஷ்டிரா கடற்கரையிலிருந்து கிழக்கு-மத்திய அரபிக் கடலுக்கு வெள்ளிக்கிழமை காலை  சென்றடையும்.

அடுத்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவிலிருந்து தெற்கு குஜராத் கடற்கரைகளை நோக்கி கிழக்கு-மத்திய மற்றும் அருகிலுள்ள வடகிழக்கு அரபிக் கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதன்பின்னர் படிப்படியாக மேற்கு-வடக்கு-மேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக கிழக்கு-மத்திய மற்றும் அருகிலுள்ள வடகிழக்கு அரபிக் கடல் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்கரைகளில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (அக்டோபர் 16 முதல் 18 வரை) கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படும். எனவே வெள்ளிக்கிழமை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனமழை மற்றும் அதீத கனமழை பெய்யும் பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு, தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது, பயிர்கள் அதிக அளவில் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். லத்தூர், சோலாப்பூரில் மீட்பு பணிகளுக்காக இரண்டு குழுவினர் சென்றுள்ளனர்.