லடாக் எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை திருப்ப ஒப்படைக்க இந்திய ராணுவம் முடிவு

லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் இந்திய வீரர்

லடாக் எல்லைக்குள் கவனக்குறைவாக நுழைந்த சீன ராணுவ வீரரை அந்நாட்டு படையினரிடம் திருப்ப ஒப்படைக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.

லடாக்: லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளை குவித்துள்ளன.

போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக பாதுகாப்பு மந்திரிகள் மட்டம் உள்பட பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலும் இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், லடாக் எல்லையில் உள்ள சுமர்-டெம்சோக் செக்டார் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் அதிரடியாக பிடித்துள்ளனர். பிடிபட்ட சீன வீரரிடம் நடத்திய விசாரணையில் அவர் கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது.

மேலும், பிடிபட்ட சீன ராணுவ வீரரின் பெயர் வாங் யா என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்குள் கவனக்குறைவாக நுழைந்த வாங் யா தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மோசமான வானிலையில் இருந்து காத்துக்கொள்ள அவருக்கு தேவையான மருத்துவம், உணவு, உடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட சீன வீரர் வாங் யா-வை உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சீன ராணுவத்திடமே மீண்டும் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லைக்குள் கவனக்குறைவாக நுழைந்த சீன வீரரை இந்திய படையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

malaimalar