புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 90 சதவீதம் பேர் குணமடைந்தனர்.
நாட்டில் நேற்று வரை, 78 லட்சத்து, 64 ஆயிரத்து, 811 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; இவர்களில், 90 சதவீதம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின் நேற்றைய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 24 மணி நேரத்தில், 50 ஆயிரத்து, 129 பேரிடம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.இவர்களுடன், நாட்டில் இதுவரை தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை, 78 லட்சத்து, 64 ஆயிரத்து, 811 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில், 6.68 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
இவர்களின் விகிதம், ஒட்டுமொத்த பாதிப்பில், 8.50 சதவீதம்.கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று வரை, 70 லட்சத்து, 78 ஆயிரத்து, 123 பேர் குணமடைந்துள்ளனர்; மீட்பு விகிதம், 90 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வைரஸ் பாதிப்பால் கடந்த, 24 மணி நேரத்தில், 578 பேர் உயிரிழந்துஉள்ளனர். இதில் மஹாராஷ்டிராவில், 137; மேற்கு வங்கத்தில், 59; சத்தீஸ்கரில், 55; கர்நாடகாவில், 52; டில்லியில், 36 மற்றும் தமிழகத்தில், 35 இறப்புகள் பதிவாகி உள்ளன.இவர்களுடன், நேற்று வரை பலியானோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 534 ஆக உயர்ந்துள்ளது; இறப்பு விகிதம், 1.51 சதவீதமாக உள்ளது. உயிரிழப்புகளில், 43 ஆயிரத்து, 152 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக தமிழகம், 10 ஆயிரத்து, 893 பேருடன், இரண்டாம் இடத்திலும், கர்நாடகா, 10 ஆயிரத்து, 873 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
கொரோனா பாதிப்பை கண்டறிய, நேற்று ஒரே நாளில், 11.41 லட்சம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.இவர்களுடன், நாடு முழுதும் பரிசோதனைக்கு உள்ளானோர் எண்ணிக்கை, 10.25 கோடியை கடந்துஉள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது
dinamalar