இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் டில்லியில் முக்கிய பேச்சு

புதுடில்லி : இந்தியா, அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் மாநாடு, டில்லியில் நடந்தது.

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்களின் மாநாடு, 2018ல் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாம் மாநாடு, டில்லியில் இன்று நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் பங்கேற்றனர். இந்திய தரப்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றனர். இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து உள்ளது. மேலும், தென் சீனக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சீனா, பல நாடுகளின் எல்லையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதேபோல், சீனா – அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. அதனால், அமைச்சர்கள் இடையேயான மாநாட்டின்போது, சீனா உடனான பிரச்னைகள் குறித்து பேசப்பட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில், நவ., 3ல் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அமெரிக்க அமைச்சர்களின் வருகை, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த கூட்டத்தில் நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வளர்ந்து வருகிறது. சட்டத்தினால் ஆன சர்வதேச உத்தரவை உறுதி செய்யவும், சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகளில் நாம் ஒன்று சேர்ந்து உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

dinamalar