மோடி
பீகார் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தியையும், தேஜஸ்வி யாதவையும் பிரதமர் மோடி கடுமையாக தாக்கிப்பேசினார். அவர்களை இரட்டை இளவரசர்கள் என விமர்சித்த அவர், இந்த தேர்தலில் அவர்கள் தோல்வியைத் தழுவுவார்கள் என குறிப்பிட்டார்.
சாப்ரா : பீகார் சட்டசபை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று 2-வது கட்ட பிரசாரம் செய்தார். சாப்ரா, சமஸ்திபூரில் நடந்த பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் நமது அண்டை நாட்டினர் (பாகிஸ்தான்) தங்களது தொடர்பை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அவர்களின் ஒப்புதல், நமது எதிர்க்கட்சிகளின் முகமூடிகளை கழற்றி விட்டது. அவர்கள் எப்போதுமே தங்களது அரசியல் லாபத்தில்தான் அதிக அக்கறை கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட சக்திகளிடம் பீகார் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி, 2 பட்டத்து இளவரசர்களின் (ராகுல் காந்தி, லாலு மகன் தேஜஸ்வி யாதவ்) கூட்டணி. அவர்களுக்கு தத்தமது சிம்மாசனங்களை பாதுகாப்பதில்தான் அக்கறை இருக்கிறது.
ஒரு பக்கம் பா.ஜ.க. கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசால் முன்னேற்றம் வந்துள்ளது. மற்றொருபக்கம், இரட்டை இளவரசர்கள் தத்தமது சிம்மாசனத்தை காப்பாற்றும் ஒரே திட்டத்துடன் செயல்படுகின்றனர். அவர்களில் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரபிரதேசத்தில் தோல்வியை தழுவினார். அவர் இப்போது பீகார் காட்டு ராஜ்யத்தின் இளவரசருக்கு ஆதரவு அளிக்கிறார். அவர்கள் மீண்டும் தோல்வியைத் தழுவப்போகிறார்கள்.
பீகார் தாய்மார்கள் அடுத்த சில வாரங்களில் வரவுள்ள சத்பூஜையை நடத்த முடியுமா என கவலைப்படத்தேவையில்லை. உங்களின் இந்த மகன் டெல்லியில் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் தேவைகளை நான் பார்த்துக்கொள்வேன்.
ஏழைகளை எதிர்க்கட்சியினர் தேர்தலின்போது மட்டுமே நினைவில் கொள்கிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் அவர்களை மறந்து விடுகிறார்கள். அதன்பின்னர் அவர்கள் தங்களது சொந்தக் குடும்பங்களைப் பற்றித்தான் கவனித்துக்கொள்கின்றனர்.
சர்தார் படேலை காங்கிரஸ் கட்சியினர் வசதியாக மறந்து விட்டனர். அவர் என்ன ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், பா.ஜ.க.வை சேர்ந்தவரா? இல்லை. அவர் காங்கிரஸ்காரர். ஆனால் அவரை அவரது பிறந்த தினத்தில் காங்கிரஸ் மறந்து விட்டது.
எங்கள் அரசு மேற்கொண்டுள்ள நலத்திட்டங்கள் பற்றி ஒரு பெண் சரளமாக பேசியதும், அவரிடம் மோடி உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என கேட்ட பத்திரிகையாளரிடம் மோடி எங்களுக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். நாங்கள் உங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்று நினைக்கிறீர்களா அல்லது அவருக்கு ஓட்டு போட வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று எதிர்க்கேள்வி கேட்டது என்னை கவர்ந்தது. (சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவைத்தான் மோடி இவ்வாறு குறிப்பிட்டார்.) அவர்தான் பெரும்பாலான வாக்காளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
பீகாரில் நடந்த முதல் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள், பண்டிதர்களின் கணிப்பு தவறு என்றும், பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் காட்டின. இது எதிரிகளை விரக்தி அடையச்செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.