தியேட்டர்
மகாராஷ்டிராவில் இன்று முதல் தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது. இதேபோல யோகா மையங்கள், உள்விளையாட்டு அரங்கங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
மும்பை : கொரோனா ஊரடங்கு காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடங்கும் தியேட்டர்களை கடந்த மாதம் 15-ந் தேதி முதல் திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டன. தமிழகத்தில் வருகிற 10-ந் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது.
ஆனால் இந்தி திரையுலக தொழில் நகரமாக திகழும் மும்பையை அடக்கிய மகாராஷ்டிராவில் தியேட்டர்கள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்து வந்தது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டர்களை திறப்பதற்கு ஏதுவாக தூய்மைப்படுத்தும் பணி உள்ளிட்ட ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் தியேட்டர்கள் திறப்பது உள்ளிட்ட புதிதாக சில தளர்வுகளை மகாராஷ்டிரா அரசு அறிவித்தது.
அதன்படி தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், நாடக அரங்குகளை இன்று(வியாழக்கிழமை) முதல் திறக்க மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது. அதேவேளையில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ரசிகர்கள் வெளியில் இருந்து உணவு பொருட்களை எடுத்து வர அனுமதி இல்லை.
தீபாவளி நேரத்தில் அரசு வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு தியேட்டர் உரிமையாளர்கள், சினிமா வினியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். முழுவீச்சில் தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுப்போம் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படுவதால் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
இதேபோல யோகா மையங்களும், உள் விளையாட்டு அரங்கங்களில் பேட்மிண்டன், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கும் இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள நீச்சல் குளங்களில் இன்று முதல் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்கள் பயிற்சி பெறலாம்.
மேற்கண்ட புதிய தளர்வுகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
malaimalar