இரவில் பனிப்பொழிவில் சிக்கிய பொதுமக்களை 5 மணி நேரம் நடந்து சென்று மீட்ட ராணுவம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் பகுதியில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய 10 பேரை ராணுவத்தினர் இரவில் 5 மணிநேரம் நடந்து சென்று மீட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் கடுமையாக பனிப்பொழிவு இருந்து வருகிறது. குல்மார்க் மற்றும் பஹல்காம் போன்ற மலைவாசஸ்தலங்கள் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேல் பகுதிகள் அதிக பனிப்பொழிவைப் சந்திக்கின்றன. வானிலையும் தொடர்ந்து மோசமாக இருப்பதால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பனிச்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், என்.எச் -244ல் சிந்தான் பாஸ் அருகே ஒரு இடத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட பொதுமக்கள் 10 பேர் சிக்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழு கடும் பனிப்பொழிவை பொருட்படுத்தாமல் சுமார் 5 மணி நேரம் இரவில் நடந்து சென்று அவர்களை பத்திரமாக மீட்டு சிந்தான் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டு அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டது

dinamalar