தமிழகம் முழுவதும் ஏரிகள் நிரம்புகிறது: அணைகள் நீர் மட்டம் உயர்வு

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தமிழகம் முழுவதும் உள்ள பல ஏரிகள் நிரம்பி முழுகொள்ளளவை எட்டவுள்ளன. சென்னையின் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், 21 அடியை தாண்டியது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் மழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில் பெரும் வெள்ளசேதம் ஏற்பட காரணமாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1,086 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக 24 அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தற்போது 21.13 அடியை எட்டியுள்ள நீர்மட்டம், 22 அடியை எட்டியதும், ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புழல் ஏரியின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 367 மில்லியன் கன அடி நீர் புழல் ஏரியில் உள்ளது. பூண்டி, சோழவரம் ஏரிகளிலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் குற்றாலம், பாபநாசம், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வேகமாக நிரம்பும் சென்னை ஏரிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 11.2 டி.எம்.சி.,யாகும். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, கண்டலேறு அணையில் இருந்து, செப்., 21 முதல், கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வழியாக, பூண்டி ஏரிக்கு திறக்கப்படுகிறது. ஆந்திராவில் பெய்து வரும் மழையால், அங்குள்ள அம்மப்பள்ளி அணை நிரம்பியுள்ளது. அதிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கொற்றலை ஆற்றின் வழியாக, பூண்டி ஏரிக்கு நீர் கிடைக்க துவங்கியுள்ளது. இதனால், பூண்டி ஏரியின் நீர் மட்டம், வேகமாக உயர்ந்து வருகிறது.

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு, பூண்டியில் இருந்து கால்வாய் வழியாக, நீர் திறக்கப்பட்டு வந்தது. பூண்டி நீர் மற்றும் மழை நீரால், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது, இரண்டு ஏரிகளிலும் தலா, 75 சதவீதத்திற்கு மேல் நீர் நிரம்பியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், இரண்டு ஏரிகளும் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பூண்டியில் இருந்து திறந்து விடப்படும் நீர், நேற்று காலை, 6:00 மணிக்கு திடீரென நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்; இதனால், 2015ம் ஆண்டை போல வெள்ள அபாயம் ஏற்படும் என்றதகவல், சமூக வலைதளங்களில் பரவியது. இது, அடையாறு ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள், செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தனர். பொதுப்பணித்துறை வாயிலாக, புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளின் நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், செம்பரம்பாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது. ஏரி நிரம்பிய பின்னர், முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் திறக்கப்படும். 2015 ல் நடந்தது போல் வெள்ளம் இப்போது வர வாய்ப்பு இல்லை. சென்னையில் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,086 கன அடியாக உள்ளது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரமான 24 அடியில் 21.13 அடிக்கு தண்ணீர் உள்ளது. 22 அடியை எட்டிய உடன் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மழை பொழிந்தும் தண்ணீர் நிரம்பாத சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி, வடிவுடையம்மன் கோவில் குளம்.

ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்:
ஏரி – கொள்ளளவு – நீர் இருப்பு – மழையளவு – நீர்வரத்து
பூண்டி – 3.23 – 1.41 – 5.5 – 1,095
சோழவரம் – 1.08 – 0.14 – 1.5 – 12
புழல் – 3.30 – 2.36 – 1.7 – 343
செம்பரம்பாக்கம் – 3.64 – 2.78 – 7.2 – 1,720
குறிப்பு:கொள்ளளவு, நீர் இருப்பு – டி.எம்.சி.,யில்மழையளவு – செ.மீ.,நீர்வரத்து – வினாடிக்கு கன அடி

கிருஷ்ணா நதி நீர் வரத்து நிறுத்தம்

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம், 20.70 அடியாகவும், கொள்ளளவு, 2,781 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.நீர்வரத்து, வினாடிக்கு, 1,720 கன அடியாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பெய்த தொடர் மழையால், ஒரே நாளில், 145 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சில மாதங்களாக, ஏரிக்கு வந்து கொண்டிருந்த, கிருஷ்ணா நதி நீர், நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட, பொதுப்பணித் துறை அதிகாரிகள், நேற்று காலை, ஏரியில் ஆய்வு செய்தனர்.கட்டுப்பாட்டு அறை, போலீசார் தங்கக்கூடிய பாதுகாப்பு அறை அமைப்பது குறித்தும், மதகுகள் நிலை குறித்தும், ஆய்வு செய்தனர். தற்போது, முழுக்க முழுக்க மழை நீர் மட்டுமே ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

அதனால், இனி தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இதே நிலை நீடித்தால், ஓரிரு நாட்களில், செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.எனவே, பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும், ஏரியின் நீர்மட்டம், 22 அடி தொட்டவுடனே, உபரி நீர் திறக்கப்படும் என்றும், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுருங்கிய உபரி நீர் கால்வாய்

ஏரியில் திறக்கப்படும் உபரி நீர், குன்றத்துார் – ஸ்ரீபெரும்புதுார் சாலையை கடந்து, திருநீர்மலை அருகே, அடையாறு ஆற்றில் கலக்கும்.சாலையை கடக்கும் இடத்தில், பல ஆண்டுகள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, மேம்பாலம் கட்டப்படுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் கால்வாய் சுருங்கிவிட்டது.ஏரியின் அருகே, சாலை உள்ளதால், உபரி நீர் திறக்கும் போது, வேகமாக ஓடும் தண்ணீர், கால்வாய் சுருங்கிய இடத்தில் தடைபட்டு, அருகேயுள்ள பகுதிகளில் சூழ்ந்துவிடும் அபாயம் உள்ளது. அதேநேரத்தில், தொடர்ந்து, கன மழை பெய்யும் பட்சத்தில், உபரி நீரின் அளவும் அதிகரிக்கும்.அந்த சமயத்தில், சுருங்கிய கால்வாயால், வெள்ள அபாயம் ஏற்படும் என்பதில் மாற்றமில்லை. எனவே, பொதுப்பணித் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து, சுருங்கிவிட்ட கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

12 ஏரிகள் நிரம்பின

ஸ்ரீபெரும்புதுாரில், நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால், 12 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.ஸ்ரீபெரும்புதுார் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 98 ஏரிகள் உள்ளன. கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு பெய்யும் கன மழை காரணமாக, இந்த ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து. இதனால், ஏரிகளின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்தது.இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு முழுதும், கன மழை கொட்டியது.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக, ஸ்ரீபெரும்புதுாரில், 18.3 செ.மீ., மழை பதிவானது. கன மழையால், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள ஏரிகளின் நீர் மட்டம், ஒரே இரவில் கிடுகிடுவென நிரம்பியது.இதில், எறையூர், தத்தனுார், குண்டுபெரும்பேடு, ஆரனேரி, மாம்பாக்கம், மேவளூர்குப்பம், வளர்புரம், மாத்துார், பண்ரூட்டி, போந்துார், போந்துார் பூதேரி, வல்லக்கோட்டை என, 12 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த, 12 ஏரிகளின் கலங்கல் வழியே, உபரி நீர் வெளியேறி வருகிறது.

மழையளவு குறைவு

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகப்படியான மழை கிடைக்க பெறுகிறது. அக்., மாதம் முதல் டிச., வரை உள்ள இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பருவமழையின் தாக்கம் அதிகமாக உள்ளதோடு, மாநிலத்தின் இயல்பான மழை அளவில் 47.32 சதவீதம் மழை கிடைக்கிறது. இந்த ஆண்டு நேற்று(நவ.,16) வரை இயல்பான மழை மழையளவு 287.9 சதவீதம். ஆனால், 180.7 மி.மீ., அளவு மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழையளவை விட 37 சதவீதம் குறைவாகும். சென்னை காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இயல்பான அளவும், மற்ற 31 மாவட்டங்களில் இயல்பான அளவை விட குறைவாக பெய்துள்ளது.

மாநிலத்தில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என 4,133 பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிகவும் அதிக பாதிப்புக்குள்ளாகும் குதிகள் – 321, அதிக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் 797, மிதமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் -1,096, குறைவாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் -1,919. முன்னெச்சரிக்கை மழை மற்றும் வெள்ளம் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்க 4,713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை, குமரியில் மழை

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக 138 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக 143 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர் மட்டம் நேற்று 101.50 அடியில் இருந்து இன்று ஒரே நாளில் 9.70 அடி நீர்மட்டம் உயர்ந்து 111.20 ஆகியுள்ளது. குமரி மாவட்டத்தில் பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்:

பாபநாசம்:

உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 111.20 அடி
நீர் வரத்து : 9120.35 கனஅடி
வெளியேற்றம் : 812.25 கனஅடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 118.50

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 86.10 அடி
நீர் வரத்து : 2900 கனஅடி
வெளியேற்றம் : 25 கன அடி

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 76.50 அடி
நீர் வரத்து : 564 கன அடி
வெளியேற்றம் : 70 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 69.50 அடி
நீர்வரத்து : 145 கனஅடி
வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 62.01 அடி
நீர் வரத்து : 172 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 16 கன அடி
வெளியேற்றம்: 16 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 97 அடி
நீர் வரத்து 30 கன அடி
நீர் வெளியேற்றம்: 48 கன அடி

dinamalar