பருவ நிலை மாற்றம்: நாடுகளுக்கு மோடி அழைப்பு

புதுடில்லி:”பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை தனியாக எதிர்கொள்ளாமல், உலக நாடுகள் அனைத்தும், ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

‘ஜி – 20’ நாடுகள் அமைப்பின், 15வது மாநாடு, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக, ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக இந்த மாநாடு நடக்கிறது.

இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக, கொரோனா வைரஸ் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின், உலக நாடுகள் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா தொற்றுதான்.

நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, கொரோனா பாதிப்பை தடுக்க முடியும். பொருளாதார மீட்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகியவற்றை மீட்பதற்காகவும், ஜி – 20 நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பூமியை பாதுகாக்கும் நோக்கில், நாடுகளின் தலைவர்களாக இருக்கும் நாம் தான், எதிர்கால மனிதகுலத்துக்கு அறங்காவலர்கள்.அறிவுத்திறன், தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை அடிப்படையில், உலகளாவிய குறியீட்ட, நாம் புதிதாக உருவாக்கி, முன்னோக்கி நகர்வது அவசியம்.

பருவ நிலை மாற்றம் பற்றி, நாம் கவலைப்படுகிறோம். இந்த சவாலை தனியாக எதிர்கொள்ளாமல், உலக நாடுகள் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும். பருவ நிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளதை விட, இந்தியா அதிகமான பணிகளைச் செய்துள்ளது. இயற்கையுடன் இணைந்து வாழ்வது, இந்தியாவின் கலாசாரம். இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை வெறும் உற்பத்தி சக்தியாக பார்க்காமல், அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையும் முன்னேற வேண்டும். அப்போதுதான், உலகம் உண்மையான வளர்ச்சி றும்.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார். மாநாட்டின் பேசிய பின், பிரதமர் மோடி, ‘டுவிட்டரில்’ பதிவிட்ட கருத்தில், ‘ஜி – 20 நாடுகளின் தலைவர்களுடனான ஆலோசனை, சிறப்பாக அமைந்தது. ‘கொரோனாவிலிருந்து விரைவாக உலக நாடுகள் மீள்வதற்கு, ஒருங்கிணைந்த முயற்சிகள் முக்கியமானது’ என, தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் வாய்ப்பு

ஜி – 20 அமைப்பில், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்ய கூட்டமைப்பு, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
‘அனைவரும், 21ம் நுாற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது’ என்ற தலைப்பில், 15வது ஜி – 20 மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு, சவுதி அரேபிய மன்னர் சல்மான் தலைமை வகித்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில், காலநிலை மாற்றம், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்கள், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நன்மைகளை பகிர்ந்து கொள்ள தைரியமான உத்திகளை கடைப்பிடித்தல் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டன. கொரோனா தொற்றிலிருந்து மீள்வது, பொருளாதார மீட்சி, வேலைவாய்ப்பை உருவாக்குவது, முழுமையான, நிலையான எதிர்காலத்தை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஜி – 20 அமைப்பின், 16வது மாநாடு, அடுத்த ஆண்டு, இந்தியாவில் நடக்கிறது

dinamalar