தமிழகத்திற்கு ‛ரெட் அலர்ட்’; டிச.,2, 3, 4 தேதிகளில் அதீத கனமழை பெய்யும்

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து தமிழகத்தில் டிச.,2, 3, 4 தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ‛ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத்தாழ்வு பகுதி நேற்று (நவ.,29) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் மையம் கொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிரமடைந்து புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தென் தமிழகம், தெற்கு கேரளா பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு ‛ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதனால், டிச.,2, 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

dinamalar