புதுடில்லி : ‘டில்லியில் கைதான, ஐந்து பேருக்கும், பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பு உள்ளது’ என, டில்லி போலீசார் தெரிவித்தனர்.
டில்லியின் ஷாகர்பூர் பகுதியில், சந்தேகப்படும் வகையில் பதுங்கியிருந்த ஐந்து பேரை, டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2 கிலோ ஹெராயின், ஒரு லட்சம் ரூபாய் மற்றும் மூன்று கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கை குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கைதானவர்களில் இருவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள மூவர், காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். பஞ்சாபை சேர்ந்த இருவரும், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த, சவுரியா சக்ரா விருது பெற்ற பல்விந்தர் சிங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், பல்விந்தர் சிங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டவை என, அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைதானவர்களில், பஞ்சாபைச் சேர்ந்தவர்களை கொலையாளிகளாகவும், காஷ்மீரை சேர்ந்தோரை போதைப்பொருள் விற்பனை வாயிலாக நிதி திரட்டுவோராகவும், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு, பாகிஸ்தானின், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினருடன் நேரடி தொடர்பு உள்ளது. இதன்படி பஞ்சாபின் காலிஸ்தான் அமைப்பினரை, காஷ்மீர் பயங்கரவாதிகளுடன் இணைக்கும் நடவடிக்கைகளை ஐ.எஸ்.ஐ., அமைப்பினர் மேற்கொண்டுள்ளது உறுதியாகிறது.கைதான ஐந்து பேரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். மிகப் பெரிய தாக்குதல் திட்டத்துக்கு, இவர்கள் திட்டமிட்டிருந்தனரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்
dinamalar