மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சர் பாராட்டு
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, புதிய கல்வி கொள்கைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
புதுடெல்லி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சர் ஹுசைன் பின் இப்ராஹிம் அல் ஹம்மதி ஆகியோர் இடையிலான சந்திப்பு காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது கல்வித்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சர் உசைன் பின் இப்ரஹிம் அல் ஹம்மதி, மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை வெகுவாகப் பாராட்டினார். மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இந்தக் கொள்கை ஒரு தொலைநோக்கு திட்டம் என்று அவர் கூறினார். மேலும் கல்வித்துறையில் நீண்டகால ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பேசுகையில், இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மிகவும் வலுவான மற்றும் ஆழமான இருதரப்பு உறவைப் பகிர்ந்து கொள்வதாகவும் கல்வித்துறையில் இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசிய அவர், “இது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்யும், மேலும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிக்கும். இந்த புதிய கல்வி கொள்கை சர்வதேச தளங்களுக்கு மாணவர்களை ஒன்ற வைக்கும்” என்று தெரிவித்தார்
dailythanthi