ஆந்திராவில் பரவி வரும் மர்ம நோய்: 615 பேர் பாதிப்பு

ஆந்திராவில் பரவி வரும் மர்ம நோயால் 615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோதாவரி, ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மர்ம நோய் பரவுவதற்கு அரிசி, காய்கறிகளில் கலந்திருக்கும் பூச்சி கொல்லிகளே காரணம் என புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் எலூரில் வேகமாக பரவி வரும் மர்ம நோயால் சாலையில் நடந்து செல்பவர்கள் திடீரென மயங்கி விழுகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் வலிப்பு நோயுடன், நுரை நுரையாக வாந்தி எடுப்பதாகவும், விசித்திரமான குரலில் அலறுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மக்கள் பீதி அடைந்துள்ள நிலையில், இதுவரை மர்ம நோய்க்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், மாநில அரசால் ரத்த மாதிரிகளில் இருந்த ஈயம் மற்றும் நிக்கலின் தடயங்களை, டெல்லி எய்ம்ஸ் மற்றும் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவன வல்லுநர்கள் அரிசியில் கலந்திருக்கும் பாதரசமும், காய்கறிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் இருந்த பூச்சிக்கொல்லிகள் தான் காரணம் என்று தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட சுற்றுப்புற காற்றின் தரம் மற்றும் நீர் குறித்த ஆய்வில், தண்ணீரில் ஹெவி மெட்டல் இல்லை என்பது தெரியவந்துள்ளது

dailythanthi