விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் – டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு

அரவிந்த் கெஜ்ரிவால்

விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஒருநாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளார்.

டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் எல்லையில் விவசாயிகள் இன்று 18-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுவரை மத்திய அரசுடன் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனர். விவசாயிகள் நாளை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலும் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.

இது தொடர்பாக முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நான் நாளை ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளேன். ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

சில மத்திய மந்திரிகளும், பாஜக தலைவர்களும் விவசாயிகளை தேசவிரோதிகள் என கூறுகின்றனர். பல முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள், தேசிய சர்வதேச விளையாட்டு வீரர்கள், பாடகர்கள், திரை நட்சத்திரங்கள், மருத்துவர்கள், வணிகர்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவருமே தேசவிரோதிகள் தானா? என பாஜக-வினரிடம் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்.

என தெரிவித்துள்ளார்.

malaimalar