டெல்லி மாநகராட்சி நிதி விவகாரம்… ஆம் ஆத்மி கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள் கைது

ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள புகைப்படம்

டெல்லியில் மாநகராட்சி நிதி குழப்பம் நீடித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் 6 எம்எல்ஏக்களை காவல்துறை கைது செய்துள்ளது.

புதுடெல்லி: டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளுக்கும் தர வேண்டிய நிலுவை தொகையை கெஜ்ரிவால் அரசு தரவில்லை எனக்கூறி, பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக மேயர்களும், பா.ஜ.க.வினரும் தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஆனால், மாநகராட்சிகளுக்கு தர வேண்டிய அனைத்து நிதிகளும் தரப்பட்டு விட்டதாகவும், ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக மாநகராட்சிகளில் நிதி குழப்பம் நிலவுகிறது என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களை டெல்லி போலீஸ் கைது செய்திருப்பதாக அக்கட்சி டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது. மாநகராட்சி நிதி இழப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியதால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறி உள்ளது.

பாஜக எந்த தவறும் செய்யவில்லை என்றால், ஏன் இவ்வளவு பயப்படுகிறது? என்றும் ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

இந்த டுவிட்டர் பதிவுடன் எம்எல்ஏக்கள் கைது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு, அதிகப்படியான ஜனநாயகத்தின் உண்மையான படம் என அதில் குறிப்பிட்டுள்ளது

malaimalar