மத்திய அரசு
ரஷியாவிடம் கொடுத்திருந்த ஆர்டரில் 10 கோடி டோஸ் மருந்துகளை இந்தியா ரத்து செய்து இருக்கிறது. இவற்றை மாற்று நிறுவனங்களிடம் இருந்து வாங்க உள்ளனர்.
புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி மருந்துகளை பல நிறுவனங்கள் தயாரித்து இறுதி கட்டத்துக்கு கொண்டுவந்துள்ளன. இதில் முதன் முதலாக பைசர் நிறுவனம் தயாரித்துள்ள மருந்து இங்கிலாந்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அடுத்ததாக அமெரிக்காவிலும் இந்த மருந்தை பயன்படுத்த உள்ளனர். ரஷ்யா கண்டுபிடித்த ‘ஸ்புட்னிக்’ மருந்து அந்த நாட்டில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல நிறுவனங்கள் தயாரித்துள்ள மருந்துகள் எந்த நேரத்திலும் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சிறப்பாக செயல் படும் மருந்துகளை வாங்க இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. இதன்படி 160 கோடி டோஸ் மருந்துகளை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்து இருந்தது.
ரஷியாவின் ஸ்புட்னிக் மருந்து முதன்முதலில் பயன் பாட்டுக்கு வந்ததால் அந்த மருந்தை அதிக அளவில் வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது.
மருந்துகளின் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் அவற்றை வாங்குவது அல்லது ரத்து செய்வது என்று முடிவு செய்திருந்தனர். அதில் ஸ்புட்னிக் மருந்தின் பரிசோதனை முடிவுகள் இன்னும் மேம்பட்ட நிலைக்கு வரவில்லை. எனவே ரஷியாவிடம் கொடுத்திருந்த ஆர்டரில் 10 கோடி டோஸ் மருந்துகளை இந்தியா ரத்து செய்து இருக்கிறது. இவற்றை மாற்று நிறுவனங்களிடம் இருந்து வாங்க உள்ளனர்.
இப்போது ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் மருந்தை அதிக அளவில் வாங்க இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. இந்த மருந்தை இந்தியாவை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. எனவே அவர்களிடமே அந்த மருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளனர்.
பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் மருந்துகளை வாங்கும் ஒப்பந்தத்தை நீடிப்பது அல்லது ரத்து செய்வது என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் படி உலகின் பல நாடுகளும் மருந்து வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளன.
கடந்த 12 நாட்களில் மட்டும் 1 கோடியே 92 லட்சம் டோஸ் மருந்துகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
malaimalar