19வது நாளாக போராட்டம் நீடிப்பு- விவசாய சங்க தலைவர்கள் உண்ணாவிரதம்

போராட்டக் களத்தில் விவசாய சங்க நிர்வாகிகள்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் பகுதிகளில் விவசாய சங்க தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியிலும், டெல்லி எல்லைப்புற சாலைகளிலும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 19-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், விவசாய சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன. டெல்லியை இணைக்கும் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல் செல்லும் போராட்டத்தையும் நடத்தினார்கள்.

தீவிர போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று டெல்லியிலும், போராட்டம் நடைபெறும் எல்லைப்புற சாலைகளிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் காலை 8 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மாலை 5 மணி  வரை இந்த போராட்டம் நடக்கிறது.

இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாய சங்க நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். மாலையில் உண்ணாவிரதத்தை நிறைவு செய்யும் நிர்வாகிகள், அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.

malaimalar