கொரோனா தடுப்பூசி தயாரிப்பு: உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் இந்திய நிறுவனங்கள்

உலக அளவில் தடுப்பூசிகளை அதிக அளவில் தயார் செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிப்பதற்கான கட்டமைப்புகளை இந்திய மருந்து நிறுவனங்கள் அதிகப்படுத்தியுள்ளது.

புதுடெல்லி: உலக அளவில் தடுப்பூசிகளை அதிக அளவில் தயாரிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த தடுப்பூசி உற்பத்தியில் 60 சதவிகிதம் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்பட்டுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. போலியோ, மலேரியா உள்பட அனைத்து நோய்களுக்கும் தடுப்பூசி உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு கொடுப்பதில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தடுப்பூசி தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. அதேபோல் பாரத் பயோடெக் நிறுவனமும் தடுப்பூசி தயாரிப்பில் முக்கிய இடம்பெற்றுள்ளது.

அதேபோல் இந்தியாவில் உள்ள பல்வேறு மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு அதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் பைசர், ரஷியாவின் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் சில நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல், இங்கிலாந்தின் அகஸ்ட்ரா ஜெனகா நிறுவன தடுப்பூசியும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுவதால் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்க வேண்டுய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் பைசர், ஸ்புட்னிக் வி, அகஸ்ட்ரா ஜெனகா உள்ளிட்ட கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசியை அதிக அளவில் உற்பத்தி செய்ய இந்திய மருத்து தயாரிப்பு நிறுவனங்களை அனுகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் பைசர், ஸ்புட்னிக் வி, அகஸ்ட்ரா ஜெனகா உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க விரைவில் ஒப்பந்தம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், தற்போதுவரை கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் தற்போதுவரை மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி உற்பத்திக்கு ஒப்பந்தம் செய்யவில்லை.

ஆனாலும், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் எப்படியும் தங்களிடம்தான் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்துகொடுக்க ஒப்பந்தம் செய்யும் என்ற நம்பிக்கையில் இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக முதலீடு அதிகரிப்பு, உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், வேலைக்கு ஆட்களை எடுத்தல், தயாரிக்கப்படும் தடுப்பூசியை கொண்டு செல்வதற்கான சரக்கு வாகனங்களை வாங்குதல், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி மிகவும் குளிர் சூழ்நிலையில் வைக்கப்பட வேண்டும் என்பதால் அந்த குளிர் சூழ்நிலையிலான சேமிப்பு அறைகளை அமைத்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் திவீரமாக மேற்கொண்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் மூலம் கொரோனா தடுப்பூசிகளை மிகப்பெரிய அளவில் தயாரித்து உலக நாடுகளுக்கு விநியோகம் செய்வதில் இந்திய மருந்து நிறுவனங்கள் மிகப்பெரிய பங்காற்ற உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

malaimalar