சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை: ரூ.1 கோடியை அள்ளியது போலீஸ்

சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் அதிகாரி வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் நடந்த சோதனையில் ரூ.1 கோடியே 37 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கட்டு கட்டாக கரன்சியும் ரெய்டில் சிக்கியது

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்ககம் செயல்படுகிறது.இந்த அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பாண்டியன் பணிபுரிகிறார். இவர் லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் இயக்ககத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பாண்டியன் அலுவலகத்தில் 88 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்தனர். வங்கிக்கணக்கில் ரூ. 38,66,220 இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து சென்னை சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்தது.இதில்

*ரூ.1 கோடியே 37 லட்சம் ரொக்கம்,

*ரூ.1.22 கோடி மதிப்புள்ள 3.081 கிலோ தங்கம்,

*ரூ. 1.51 லட்சம் மதிப்புள்ள 3343 கிராம் வெள்ளி நகைகள்

*ரூ. 5.40 லட்சம் மதிப்புள்ள 10.52 காரட் வைரம்

*ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள்

*ரூ.37 லட்சத்திற்கான பிக்சட் டெபாசிட் ஆவணங்கள்

*ரூ. டொயோட்டா எடியோஸ் கார் மற்றும் 3 இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சார் – பதிவாளர் அலுவலகத்தில் சோதனை செய்து 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதே அலுவலக வளாகத்தில் ‘லஞ்ச் பேக்’கில் 9160 ரூபாயை கைப்பற்றினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி சார் – பதிவாளர் அலுவலகத்தில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். நேற்று இரவு 9:00 மணி வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 56 லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாயை பறிமுதல் செய்தனர்

dinamalar