இந்திய பொருளாதாரத்தை நம்பும் உலக நாடுகள்: பிரதமர் மோடி

புதுடில்லி: இந்திய பொருளாதாரத்தை உலக நாடுகள் நம்புவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனா காலத்திலும், நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அசோசெம் அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சியில் டாடா நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது. நமது நாடு தன்னிறைவு இந்தியாவாக மாறுவதில் மட்டும் சவால் இல்லை. அதனை எவ்வளவு காலத்தில் அடைகிறோம் என்பது முக்கியம். தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாற தொழில்துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். உலகம் மற்றொரு தொழில்புரட்சிக்கு தயாராகி வருகிறது. இதனால், நமது நாடு நிர்ணயித்த இலக்குகளை அடைய இன்று முதல் நாம் தயாராகி அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டது.இந்தியா குறித்த உலக நாடுகளின் பார்வையை, மத்திய அரசு செய்த சீர்திருத்தங்கள் மாற்றியுள்ளன.

தன்னிறைவு இந்தியா திட்டத்திற்காக உற்பத்தி துறையில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக பல சலுகைகளை அளித்து வருகிறது. தொழில்துறையினர் சிறந்த கார்பரேட் நிர்வாகத்தையும், லாப பகிர்வு முறையை பயன்படுத்த வேண்டும். உலக நாடுகள் இந்திய பொருளாதாரத்தை நம்புகின்றன. கொரோனா காலத்தில், உலக நாடுகள் பல தடைகளை சந்தித்த போதும், இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரித்தது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளில் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். அந்த துறையில், தனியார் துறையினர் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

dinamalar