பிளாஷ்பேக் 2020 – கொரோனா வைரஸ், விவசாயிகள் போராட்டம் என இந்தியாவை உலுக்கிய சம்பவங்கள்

விவசாயிகளின் தொடர் போராட்டம்

இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், இந்தியாவை உலுக்கிய முக்கிய சம்பவங்களின் தொகுப்பை காணலாம்.

புதுடெல்லி: முதல் கொரோனா நோயாளி, விமான விபத்து, புயல்களால் கடும் பாதிப்பு, நிலச்சரிவு, விஷ சாராய உயிரிழப்பு என 2020-ம் ஆண்டில் இந்தியாவை உலுக்கிய சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்கள் பட்ட அவஸ்தைகள், பொருளாதார மந்தநிலை, இயற்கை சீற்றங்கள் என கடுமையான சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2020ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறுகிறது.

இந்த ஆண்டு இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.

ஜனவரி:

ஜனவரி 2 – தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் பொது செயலாளராக இருந்து வந்த டி.பி. திரிபாதி காலமானார்.

ஜனவரி 30 – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று முதல் நோயாளி கண்டறியப்பட்டார்.

பிப்ரவரி:

பிப்ரவரி 11 – டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைத்தார்.

பிப்ரவரி 24 – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்தார்.

பிப்ரவரி 29 – டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 53 பேர் பலியாகினர்.

மார்ச்:

மார்ச் 20 – காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் மத்திய பிரதேச முதல் மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

மார்ச் 22 – கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு முதல்முறையாக 14 மணி நேர பொது முடக்கத்தை அறிவித்தது.

மார்ச் 23 – பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேசம் மாநில முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.

மார்ச் 24 – கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் பொது முடக்கத்தை அறிவித்தது.

ஏப்ரல்:

ஏப்ரல் – மத்திய அரசு அறிவித்த பொது முடக்கம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ஏப்ரல் 1 – கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது இறக்கும்  சுகாதார பணியாளர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 2 – மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா குறித்த பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது, கற்களை வீசி தாக்கி விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏப்ரல் 3 – நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பை டிராக் செய்யும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆரோக்ய சேது எனும் செயலி வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 29 – பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மே:

மே 7 – ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன வாயு கசிந்து 13 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.

மே 20 – மேற்கு வங்காள மாநிலத்தை அம்பன் புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த புயலில் சிக்கி 72 பேர் பலியாகி உள்ளனர்.

மே 29 – சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி அஜித் ஜோகி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஜூன்:

ஜூன் 2 -4 : அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிர மாநிலம் அலிபாக்கில் கரைகடந்தது. ராய்காட் மாவட்டம் பெரும் சேதத்தை சந்தித்தது. இந்த புயலுக்கு 6 பேர் பலியாகினர்.

ஜூன் 14 – பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

ஜூன் 15- லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜூன் 29 – கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சீன பொருட்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவியது. இந்நிலையில் டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

ஜூலை:

ஜூலை 3 – உத்தர பிரதேசத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டிஎஸ்பி உள்பட 8 போலீசார் உயிரிழந்தனர். சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜூலை 5 – கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. இது அங்குள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தின் பெயரால் கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் துணை தூதரகத்தில் பணியாற்றிய இளம்பெண் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட பலர் சிக்கினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஜூலை 17 – இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை10 லட்சத்தைத் தாண்டியது.

ஜூலை -29 – இந்திய கடற்படையை வலுப்படுத்தும் விதமாக, பிரான்சில் இருந்து வாங்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் அரியானாவின் அம்பாலா விமான நிலையத்தில் தரையிறங்கின.

ஜூலை 29 – டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜூலை 29 – பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த பலர் விஷ சாராயம் குடித்தனர். இதில் 120க்கும் அதிகமான்னோர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.

ஆகஸ்டு:

ஆகஸ்டு 5 – அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ஆகஸ்டு 7 – துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு 190 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது. இதில் இரு விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்டு 7 – கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தமிழர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

ஆகஸ்டு 9 – ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர்.

ஆகஸ்டு 31 – டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.

 

செப்டம்பர்:

செப்டம்பர் 2 – மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

செப்டம்பர் 6 – உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்துக்கு இந்தியா சென்றது.

செப்டம்பர் 17 – எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் இன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

செப்டம்பர் 27 – வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் மசோதாக்கள் சட்டமாகியுள்ளது.

செப்டம்பர் 30 – பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 32 பேரை விடுவித்தது சுப்ரீம் கோர்ட்

அக்டோபர்:

அக்டோபர் 3 – இமாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அக்டோபர் 8 – லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனரும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்.

அக்டோபர் 28 – பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் நடைபெற்றது.

நவம்பர்:

நவம்பர் 3 – பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கொரோனா தடுப்புவிதிமுறைகளுடன் நடைபெற்றது.

நவம்பர் 7 – பீகார் சட்டசபை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் நடைபெற்றது.

நவம்பர் 7 –  இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.

நவம்பர் 10 – மத்திய பிரதேசம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 58 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது.

நவம்பர் 10 – 3 கட்டமாக நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்கள் பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.

நவம்பர் 13 – பாகிஸ்தான் ராணுவம் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 ஆயிரத்து 52 முறை எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என ராணுவம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 14 – ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். லாங்கேவாலா ராணுவ பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து கூறினார்.

நவம்பர் 15 – பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியாக 7-வது முறையாக நிதிஷ் குமார் பொறுப்பேற்றார்.

நவம்பர் 17 – அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து கூறினார்.

நவம்பர் 23 – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அசாம் மாநில முன்னாள் முதல் மந்திரியுமான தருண் கோகாய் உடல்நலக் குறைவால் காலமானார்.

நவம்பர் 25 – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் (71) காலமானார்.

நவம்பர் 26 – மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்கள் நலனுக்கு எதிரானவை என்பதால், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர்.

டிசம்பர்:

டிசம்பர் 6 – ஆந்திராவின் எலுரு என்ற நகரின் பல இடங்களில் வசித்த 270 பேர் மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

டிசம்பர் 8 – மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெற்றது.

டிசம்பர் 10 – தலைநகர் டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

டிசம்பர் 21 – காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான மோதிலால் வோரா காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

மொத்தத்தில் 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆதிக்கம் நிறைந்ததாக அமைந்துவிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுக்கு தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

எனவே, வரும் 2021-ம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையும், புதிய முன்னேற்றத்தையும் கொடுக்கும் ஆண்டாக மாறும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது

malaimalar