இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; ஒருவாரம் தனிமைப்படுத்துதல் கட்டாயம்

இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு மும்பையில் புதிய கட்டுப்பாடுகளும் வழிகாட்டல்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

புதுடெல்லி; சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது. அந்த வைரசின் தாக்கம் தற்போது சற்று குறைய தொடங்கி உள்ளது. மேலும் கொரோனாவுக்கு மருந்தும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரசாக பரவி வருகிறது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது.

இதனால் அந்த வைரஸ் தங்கள் நாட்டுக்குள் வராமல் தடுக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் இங்கிலாந்த்துக்கான விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த நவம்பர் 25-ந்தேதிக்கு பிறகு இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

லண்டன் உள்ளிட்ட நகரங்களில் இருந்து மும்பைக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் தொற்று அறிகுறி இல்லாதவர்கள் ஏழுநாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு ஏழு நாட்கள் மருத்துவமனை சிகிச்சையும் சிகிச்சைக்குப் பின்னர் ஏழு நாட்களுக்குப் பிறகு பல்வேறு பரிசோதனைகளும் வீடுகளில் தனிமைப்படுத்துதலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு தனி மருத்துவமனை ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், அரசு அதிகாரிகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

dailythanthi