நாடு முழுவதும் 41 நகரங்களில் கொரோனா தடுப்பூசி மருந்து குடோன்

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி மருந்துகள் 37 மாநிலங்களில் உள்ள மருந்து சேமிப்பு குடோன்களுக்கு அனுப்பப்படும். மொத்தம் 41 நகரங்களில் பெரிய அளவில் சேமிப்பு கிடங்குகள் செயல்படும்.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நோயை கட்டுக்குள் கொண்டு வர கோவி ஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 12 நாட்கள் முதல் 14 நாட்களுக்குள் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளை உடனடியாக அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்து ஊசி போடுவதற்கு விரிவான ஏற்பாடுகளை தொடங்கி இருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றை விமானங்கள் மூலம் ஏற்றி சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்நூல் ஆகிய இடங்களில் சேமித்து வைக்க அனுப்பப்படும். அதன் பிறகு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அவை பிரித்து அனுப்பப்படும்.

இதன்படி 37 மாநிலங்களில் உள்ள மருந்து சேமிப்பு குடோன்களுக்கு அவை அனுப்பப்படும். இவ்வாறு மொத்தம் 41 நகரங்களில் பெரிய அளவில் சேமிப்பு கிடங்குகள் செயல்படும்.

குறிப்பாக விமான நிலையங்களில் மருந்து குடோன்கள் அமைக்கப்படும். ஊசி போடப்படுவதற்கு முன்பாக இவற்றில் இருந்து ஒவ்வொரு பகுதிக்கும் மருந்துகளை பிரித்து அனுப்புவார்கள்.

பின்னர் அந்தந்த இடங்களில் சேமித்து வைத்து பயன்படுத்தப்படும். இதன்படி நாடு முழுவதும் 29 ஆயிரம் மருந்து சேமிப்பு மையங்கள் செயல்படும்.

ஒவ்வொரு மையத்திலும் குறிப்பிட்ட குளிர்நிலை வசதி கொண்ட குளிர்சாதன அறைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

முதலாவதாக சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பு ஊழியர்கள் என மொத்தம் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசி போட்டு கொள்பவர்கள் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். இதன் மூலமாக ஒவ்வொரு நபருக்கும் தனி அடையாளங்களை உருவாக்குவார்கள். அவர்களுக்கு ‘கியூ ஆர் கோடு’வுடன் அடையாள சான்றிதழ் ஒன்று வழங்கப்படும். அதன் மூலமாக எப்போது வேண்டுமானாலும் அவர்களை பற்றிய விவரங்கள் கண்காணிக்கப்படும்.

ஒவ்வொரு பொதுமக்களுக்கும் 12 மொழிகளில் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள் அனுப்பப்படும். எஸ்.எம்.எஸ். மூலமாக இவற்றை அனுப்புவார்கள்.

தடுப்பூசி போட்டு கொள்பவர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். அதை இப்போது பதிவு செய்ய முடியாது. தடுப்பூசி போடும் பணி தொடங்கியதும் அவர்கள் பதிவு செய்வதற்கு வசதி செய்யப்படும்.

தற்போது சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்களை தவிர்த்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட இருக்கிறது.

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும்

malaimalar