தமிழகத்தில் 190 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை- மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு

மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 இடங்கள் வீதம் மொத்தம் 190 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகையை மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை: இந்தியா முழுவதும் அவசரகால கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.

இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டு மகாராஷ்டிராவில் உள்ள சீரம் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கும், ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பு மருந்துக்கும் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 3-ந்தேதி அனுமதி வழங்கியது.

இதையொட்டி தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு 10 நாட்களுக்குள் வரும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது. இதன்படி இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி மருந்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு முன்பாக அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களையும் பொருட்டு தடுப்பூசிகள் இல்லாமலேயே நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி ஒத்திகை முகாம் நடைபெற்று வருகிறது.

கடந்த 2-ந்தேதி முதல்கட்ட ஒத்திகை நாடு முழுவதும் 125 மாவட்டங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

இதில் சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சாந்தோம் மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஈக்காட்டுதாங்கல் மாநகராட்சி நகர்புற சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடந்தது.

இந்த ஒத்திகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், இட வசதிகள் எவ்வாறு உள்ளன என்பதையும் நடைமுறையில் செயல்படுத்தி பார்த்தனர்.

தேர்தல் சமயத்தில் கியூவில் வந்து முறைப்படி பதிவு செய்து ஓட்டுப்போடுவது தடுப்பூசி போட வருபவர்களுக்கும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

தடுப்பூசி ஒத்திகையில் கிடைத்த அனுபவங்களை ஒவ்வொரு மாநில அரசும் மத்திய சுகாதாரத்துறைக்கு விரிவாக அறிக்கை அளித்து இருந்தது. கொரோனா தடுப்பூசி போடும் பணி “கோ-வின்” இணைய தளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள 2,300 மையங்களில் கொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது கட்ட ஒத்திகை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 இடங்கள் வீதம் மொத்தம் 190 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. காலை 9 மணி முதல் 1 மணி வரை இந்த தடுப்பூசி ஒத்திகை நடந்தது.

தடுப்பூசி ஒத்திகையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் நேற்று இரவு சென்னை வந்திருந்தார். இன்று காலை அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி ஒத்திகையை பார்வையிட்டார்.

தடுப்பூசி போட வருபவரின் பெயர் விவரங்களை எப்படி சரி பார்க்கிறார்கள்? தடுப்பூசி போட என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன? தடுப்பூசி போட வருபவர் வந்து செல்வதற்கு மருத்துவ மையங்களில் எவ்வாறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன? என்பதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்களும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

தினமும் ஒவ்வொரு மையத்திலும் 100 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு மையத்திலும் 2 மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி செலுத்த எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கணக்கிட்டுள்ளனர். ஏற்கனவே நடத்திய முகாமில் தடுப்பூசி ஒத்திகை பார்க்கப்பட்டு இருந்ததால் அந்த விவரங்களையும் மத்திய மந்திரியிடம் விவரமாக கூறினார்கள்.

தடுப்பூசி ஒத்திகையை ஆய்வு செய்த மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டுகளுக்கும் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். பின்னர் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன் பார்வையிட்டார்.

அதன்பிறகு பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் பொது மருத்துவ பொருட்கள் சேமிப்பு கிடங்கையும் சென்று பார்வையிட்டார். இன்று பிற்பகலில் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

அதன் பிறகு செங்கல்பட்டில் உள்ள தடுப்பு மருந்து மையம் உள்பட 2 இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை எவ்வளவு வழங்கப்படும் என்பது குறித்தும் மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன் விரைவில் முடிவு செய்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 51 இடங்களில் 2.5 கோடி தடுப்பூசிகள் சேமித்து வைப்பதற்கான இட வசதிகள் உள்ளதால் தென் மண்டலங்களுக்கு இங்கிருந்து தடுப்பூசியை அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த விவரங்களையும் அதிகாரிகள் மத்திய மந்திரியிடம் விரிவாக எடுத்து கூறினார்கள்.

malaimalar