மணிமுக்தாற்றில் வெள்ளம்- 3 தரைப்பாலங்கள் மூழ்கியதால் 50 கிராமங்கள் துண்டிப்பு

விருத்தாசலம் பகுதியில் உள்ள 3 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மழை நீர் விவசாய நிலத்தில் புகுந்ததால் பயிர்கள் மூழ்கின.

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக விருத்தாசலம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது. அதேபோல் அந்த பகுதிகளில் உள்ள ஓடைகளிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் மணிமுக்தா அணை அதன் முழுகொள்ளளவை எட்டியது. அதனை தொடர்ந்து அணையில் இருந்து 24 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

கோமுகி அணை நிரம்பியதால் அதில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த 2 அணைகளின் நீரும் மணிமுக்தாற்றில் கலந்தது.

மேலும் தொடர் மழை காரணமாக பல்வேறு ஓடைகளில் இருந்து வந்த மழைநீரும் சேர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள மே.மாத்தூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் அணை திறந்து விடப்படக்கூடிய சூழ்நிலை உருவானதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் அணையில் இருந்து 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் மணிமுக்தாற்றில் திறந்து விடப்பட்டது.

இதனால் மணிமுக்தாற்றின் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந்த வெள்ளத்தின் காரணமாக விருத்தாசலத்தை அடுத்த விலாங்காட்டு- மன்னம்பாடி தரைப்பாலம் மற்றும் மன்னம்பாடி-எடையூர் தரைப்பாலங்கள் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டன.

இதனால் அந்த பகுதியில் மன்னம்பாடி, எடையூர், கோவிலூர் உள்பட 15-க்கும் கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள்.

இதேபோல் விருத்தாசலம்-பெண்ணாடம் சாலையில் உள்ள சாத்துக்கூடல் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தீவனூர் பகுதியில் அமைக்கப்பட்டு வந்த தரைப்பாலமும் மூழ்கியது.

இதனால் தீவனூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விருத்தாசலம் அடுத்த உச்சிமேடு பகுதியில் உள்ள தரைப்பாலமும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் ஆலிச்சகுடி, இளமங்கலம், சாத்துக்கூடல் பட 5 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

15 ஆண்டுகளுக்கு பின்னர் மணிமுக்தாற்றில் இருகரைகளையும் தொட்டபடி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

விருத்தாசலம் பகுதியில் உள்ள 3 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக விருத்தாசலம் பகுதியில் உள்ள ஓட்டிமேடு, பெருந்துறை, ஒட்டுமலை, கார்கூடல், டி.குமாரமங்கலம், கோ.ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1,5000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் உளுந்து பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகியது. இதனால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.

விருத்தாசலம் பாலக்கரையோரம் முல்லாத் தோட்டத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள 4 வீடுகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

தாழ்வான இடங்களில் உள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேறும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கலைச்செல்வன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்

malaimalar