இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று எண்ணிக்கை 82 ஆக உயர்வு

கொரோனா பரிசோதனை

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி: பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளன. அத்துடன், சமீபத்தில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், பிரிட்டனில் இருந்து வேறு நாடுகள் வழியாக வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதில் நேற்று நிலவரப்படி நாடு முழுவதும் 71 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தினசரி கொரோனா தொற்றுகளைப் பொருத்தவரை கேரளாவில் அதிக அளவில் கண்டறியப்படுகின்றன. கேரளாவில் ஒரே நாளில் 5,051 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 3,729 பேருக்கும், சத்திஸ்கரில் 1,010 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள புதிய பாதிப்புகளில் 81.22 சதவீதம் 10 மாநிலங்களில் பதிவாகியிருப்பதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது.

malaimalar