ஏர் இந்தியாவின் நீண்டதூர விமானம் இன்று பெங்களூரு வந்து சேர்ந்தது… பெண் விமானிகள் சாதனை

நீண்ட தூர விமானத்தை இயக்கிய பெண் விமானிகள்

ஏர் இந்தியா அறிமுகம் செய்த நீண்டதூர விமானத்தை இயக்கிய பெண் விமானிகள் இன்று பெங்களுருவில் வெற்றிகரமாக விமானத்தை தரையிறக்கி சாதனை படைத்தனர்.

பெங்களூரு: இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக, முழுவதும் பெண் விமானிகளை கொண்டு, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்க திட்டமிடப்பட்டது. இந்த விமானம் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டது.

முழுவதும் பெண்களை கொண்ட விமானி அறையில், கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர், கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோர் இருந்து, இந்த வரலாற்று சிறப்பு மிக்க முதல் விமானத்தை இயக்கினர்.

இந்த விமானம் வடதுருவத்தின் மேலே சென்று, அட்லாண்டிக் பாதையில் பயணித்து, உலகின் மற்றொரு முனையான கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை இன்று அதிகாலை வந்து அடைந்தது. கிட்டத்தட்ட 16000 கிமீ தூரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கி, பெங்களூருவில் தரையிறக்கிய பெண் விமானிகளை விமான நிலைய ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இந்த விமானம்தான், ஏர் இந்தியா அல்லது இந்தியாவில் வேறு எந்த விமான நிறுவனத்தாலும் இயக்கப்படும் உலகின் மிக நீண்ட வணிக விமானம் என்பது குறிப்பிடத்தக்கது

malaimalar