இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு லேசான பக்கவிளைவு

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர கால அனுமதியளித்தது. இதனையடுத்து, ஜன.,16ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 2 லட்சத்து 24 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 16ம் தேதி மட்டும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 229 பேருக்கும், நேற்று (ஜன.,17) 17 ஆயிரத்து 702 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் இதுவரை 447 பேருக்கு லேசான பக்கவிளைவு ஏற்பட்டதாகவும், அதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை தேவைப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் குமட்டல் ஆகிய பிரச்னைகள் மட்டுமே இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

dinamalar