சைவ உணவு பிரியர்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு – ஆய்வில் தகவல்

சைவ உணவு பிரியர்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, சி.எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படுகிற அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தனது 40 நிறுவனங்களில் கொரோனா வைரஸ் பரவல் பற்றி ஒரு ஆய்வு நடத்தி உள்ளது. குறிப்பாக இவற்றின் 10 ஆயிரத்து 427 பணியாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தன்னார்வ பங்கேற்பின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களது உடலில் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருக்கிறதா என ஆராயப்பட்டது. இதில் 1,058 பேருக்கு நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருப்பது தெரிய வந்தது.

இந்த ஆய்வு முடிவில் வெளிவந்துள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

  • சைவ உணவு சாப்பிடுவோர், புகை பிடிப்போருக்கு கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு குறைவு.

  • ஏ மற்றும் ஓ பாசிட்டிவ் ரத்த பிரிவினருக்கும் கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

  • பி மற்றும் ஏபி பிரிவு ரத்தம் கொண்டவர்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

  • பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிப்போருக்கும், பாதுகாப்பு, வீட்டுப்பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், புகை பிடிக்காதவர்கள், அசைவ உணவு சாப்பிடுவோருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது

dailythanthi