ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், நிலச்சரிவால் சேதமடைந்த 110 அடி நீள முக்கிய இணைப்பு பாலத்தை 60 மணி நேரத்திற்குள் கட்டியெழுப்பி எல்லை சாலை அமைப்பு சாதனை படைத்துள்ளது.
காஷ்மீரின் ரம்பன் அருகே கேலா மோர் என்ற இடத்தில் ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலை பயணிக்கிறது. காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பது இச்சாலை ஆகும். அங்கு ஜன., 11 அன்று ஏற்பட்ட நிலச்சரிவால் இணைப்பு பாலம் ஒன்று முற்றிலும் சேதமடைந்தது. இதனை சரிசெய்யும் பொறுப்பை எல்லை சாலை அமைப்பு ஏற்றது. இந்த அமைப்பு தான் உலகின் மிக நீள சுரங்கப் பாதையான அடல் சுரங்கப் பாதையை லே – மணாலி நெடுஞ்சாலையில் கட்டியுள்ளது.
2 நாட்கள் என்ற இலக்குடன் பணிகள் தொடங்கப்பட்டன. குளிரிலும் விடாமல் இரவு, பகலாக 24 மணி நேரமும் வேலை பார்த்தனர். முன்னரே தயாரிக்கப்பட்ட ஸ்டீல் பேனல்களை பொருத்தி பாலம் உருவாக்கப்பட்டது. 60 மணி நேரத்தில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்தது. சனிக்கிழமை லாரிகள், ஜீப்கள், பொக்லைன் இயந்திரங்களை செல்ல வைத்து சோதனை ஓட்டம் நடத்தினர். தற்போது வழக்கமான போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் பல நாட்களாக தவித்த மக்கள் நிம்மதியடைந்தனர்
dinamalar