சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன் இணைய 100% வாய்ப்பு இல்லை – முதலமைச்சர் பழனிசாமி

சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன் இணைய 100% வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

புதுடெல்லி, தமிழக சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாகி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லிக்கு நேற்று விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

நேற்று பகல் 3 மணிக்கு டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் பழனிசாமி, இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்று, அவரை சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். புத்தாண்டில் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-

சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன் இணைய 100% வாய்ப்பு இல்லை. ஜெயல‌லிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் ச‌சிகலா.

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தேன். அழைப்பை ஏற்றுக் கொண்டு தமிழகம் வருவதாக பிரதமர் தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை.

இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி கூறினார்

dailythanthi