இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து – உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

பல்வேறு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை அனுப்பி உதவி செய்து வரும் இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி; உலகில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி மருந்துகளை உருவாக்கியுள்ளன.

அதேபோல இந்தியாவும் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் கடந்த 16-ந் தேதி முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுதவிர இந்தியாவில் இருந்து தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதன்படி பிரேசில், வங்காள தேசம், பக்ரைன், பூட்டான், மாலத்தீவு, மொரீசியஸ், மங்கோலியா, மொராக்கோ, மியான்மர், நேபாளம், ஓமன், சிசெல்லஸ், இலங்கை ஆகிய 13 நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

அதில் மாலத்தீவு, பூட்டான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இலவசமாகவும் மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பல நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி உதவி செய்து வருவதால், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுசம்பந்தமாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதோனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கி உதவி செய்து வருவதற்காக இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உதவுவதாலும், தகவல்களை பரிமாறிக் கொள்வதாலும்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். மக்களுக்கு நல்வாழ்வு அளிக்க முடியும்’’ என்று கூறியுள்ளார்.

இதேபோல மற்ற நாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்து உதவுவதற்காக அமெரிக் காவும், இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது

maalaimalar