ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை என பரபரப்பான சூழலில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது.
புதுடெல்லி: இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றத் தொடங்கினார்.
கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம், நெருக்கடியான காலகட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்த அம்சங்கள், ஜனாதிபதி உரையில் இடம்பெறுகின்றன.
ஜனாதிபதி உரை முடிந்ததும், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும். பிப்ரவரி 1-ந் தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், கொரோனா கால வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்படுகிறது. தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதால், இரு அவைகளும் ஒரே நேரத்தில் செயல்படாமல், காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவையும் ஒவ்வொரு நாளும் தலா 5 மணி நேரம் மட்டுமே செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையில் மாநிலங்களவையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையில் மக்களவையும் செயல்படும். ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே கேள்வி நேரம் அனுமதிக்கப்படும்.
பட்ஜெட் கூட்டத்தொடர் 2 அமர்வுகளாக நடத்தப்படும். முதல் அமர்வு பிப்ரவரி 15-ந் தேதி வரை தொடரும். இரண்டாவது அமர்வு மார்ச் மாதம் 8-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ந் தேதி முடியும்
malaimalar