விவசாயிகள் குவிவதை தடுக்க எல்லையில் தற்காலிக சுவர்

புதுடில்லி : டில்லியின் சிங்கூ எல்லையில், விவசாயிகள் அதிக அளவில் கூடுவதை தடுக்கும் நோக்கில், இரும்பு கம்பிகளால் தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள், இரண்டு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன், மத்திய அரசு, 11 முறை பேச்சு நடத்தியும், தீர்வு ஏற்படவில்லை. குடியரசு தினத்தன்று, டில்லியில் விவசாய சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை வெடித்தது. இதில், 400க்கும் அதிகமான போலீசார் காயம் அடைந்தனர்.பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், போராட்டத்தை தீவிரப்படுத்த, விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், சிங்கூ எல்லையில், விவசாயிகள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதற்காக, இரும்பு கம்பிகளை பயன்படுத்தி, தற்காலிக சுவர்களை, போலீசார் அமைத்துள்ளனர். மேலும், உடைக்க முடியாத வகையில், சிமென்ட் பயன்படுத்தியும், இந்த தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ‘குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை, திட்டமிட்ட சதிச் செயல், போராட்டத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சி, வெற்றி பெறாது. தடுப்புச் சுவர் அமைத்தாலும், விவசாயிகள் குவிவதை தடுக்க முடியாது’ என்றனர்

dinamalar