டெல்லியில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பு

பள்ளிக்கு வந்த மாணவிகள்

டெல்லியில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால், மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின் சுமார் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்படுகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன.

டெல்லியில் ஜனவரி 18-ந்தேதி 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் பிப்ரவரி 5-ந்தேதியில் இருந்து திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. அதன்படி, இன்று 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. அத்துடன் டிகிரி மற்றும் டிப்ளமோ வகுப்புகளுக்காக கல்லூரிகள், பாலிடெக்னிக் நிறுவனங்களும் திறக்கப்பட்டன.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக வீடுகளிலேயே முடங்கி கிடந்த மாணவர்கள், பள்ளிகள் திறக்கப்பட்டதால் இன்று உற்சாகத்துடன் கல்வி நிறுவனங்களுக்கு வந்தனர். அனைத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படுகின்றன. குறிப்பாக, மாணவர்கள் பெற்றோர்களிடம் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு வரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

malaimalar