சென்னையில் 41 சதவீதம் பேரை கொரோனா தொற்று தாக்கியது- தமிழக அரசு ஆய்வில் தகவல்

கொரோனா பரிசோதனை

தமிழ்நாட்டை பொருத்தவரை நகர பகுதிகளில் 36.9 சதவீதம் பேருக்கும், கிராம பகுதிகளில் 26.9 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய் ஏற்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 8 லட்சத்து 42 ஆயிரம் பேரை கொரோனா தாக்கி உள்ளது.

முறைப்படி நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலருக்கு அவர்களுக்கு தெரியாமலேயே கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இதை ‘செரோ’ என்ற கொரோனா ஆய்வு முறையில் கண்டுபிடித்து வருகின்றனர். நமது உடலில் கொரோனா தாக்கி இருந்தால் அதை எதிர்த்து போராடுவதற்காக ஆன்டிபாடி எனும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும். ரத்த மாதிரியை எடுத்து பார்க்கும் போது அதை கண்டுபிடிக்க முடியும்.

இதற்கு செரோ தொழில்நுட்ப முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுசம்மந்தமாக இந்தியா முழுவதும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அமைப்பான தேசிய தொற்றுநோய் மையம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை சார்பிலும் தமிழகம் முழுவதும் இதுசம்மந்தமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் வரை நடத்தப்பட்டது.

மொத்தம் 37 மாவட்டங்களில் 26 ஆயிரத்து 640 பேரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 31.6 சதவீதம் பேருக்கு கொரோனா தாக்கி இருப்பது தெரியவந்தது.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம் ஆகும். இந்த ஆய்வின் கணக்கின்படி அதில் 2 கோடியே 70 லட்சம் பேரை கொரோனா தாக்கி இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் 10-ல் 3 பேரை கொரோனா தாக்கி உள்ளது.

அக்டோபர் மாத புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் 6 லட்சத்து 70 ஆயிரத்து 392 பேரை கொரோனா தாக்கி இருந்ததாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆய்வு படி அதைவிட 36 மடங்கு அதிகம் பேரை கொரோனா தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது

தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிகம் பேரை கொரோனா தாக்கியுள்ளது. அங்கு சரி பாதி மக்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது 51 சதவீதம் பேர் நோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். குறைந்த பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 11 சதவீதம் பேரை மட்டும் தாக்கி இருக்கிறது.

தமிழ்நாட்டை பொருத்தவரை நகர பகுதிகளில் 36.9 சதவீதம் பேருக்கும், கிராம பகுதிகளில் 26.9 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய் ஏற்பட்டுள்ளது.

சென்னை நகரிலும் நோய் பாதிப்பு மோசமாக இருந்துள்ளது. இங்கு 40.9 சதவீதம் பேரை தாக்கி உள்ளது.

மதுரையில் 38 சதவீதம் பேரையும், திருச்சியில் 32 சதவீதம் பேரையும், கோவையில் 20.4 சதவீதம் பேரையும் தாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

வயது அடிப்படையில் பார்க்கும் போது 18 வயதில் இருந்து 28 வயதுக்கு உட்பட்டவர்களில் 30.7 சதவீதம் பேருக்கும், 40 வயதில் இருந்து 49 வயது வரை உள்ளவர்கள் 31.6 சதவீதம் பேருக்கும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25.8 சதவீதம் பேருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் நோய் தாக்கியவர்களில் 0.052 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.

malaimalar